Monday, June 24, 2013

உங்க டூத் பேஸ்ட்டுல உப்பு இருக்கா?

இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் எந்த அறிபறியுமில்லாமல் மெதுவாக brush-ல் பேஸ்ட்-ஐ போட்டுக்கொண்டு சேரில் உக்காந்து டிவி-ஐ on செய்தேன். உடன் ஒரு பெண் `உங்க பேஸ்டில் உப்பு இருக்கா?` என்று ஏதோ ரசம் குழம்பில உப்பு இருக்கா என்று கேட்பது போல கேட்டவுடன் எனக்கு அதிர்ச்சி. `உப்பில்லா பண்டம் குப்பையில `என்று அந்த காலத்தில் பெரியவங்க சொன்னது பேஸ்ட்-க்கும் பொருந்துமா என்று குழம்பினேன். ஒரு வேளை பேஸ்ட்-ல்லாம் உப்பு போட்டுதான் தேய்க்கணுமா நம்ம பாட்டுக்கு வெறுமனேயே ரொம்ப நாளா தேய்க்கிறோமே என்று சந்தேகத்தில் tube முழுக்க தேடித் பாத்தா அப்படி ஒண்ணும் போடலை. இதெல்லாம் ஒரு மார்க்கெட்டிங் ஜிம்மிக்ஸ். ஏன்னா இப்பல்லாம் மக்களுக்கு loyalty இல்ல. மாத்திக்கிட்டே இருக்கணும்.ஒன்னே ஒண்ணுதான் மனுஷனால மாத்த முடியாது. அதனால்தான் ஒவ்வொரு கம்பெனிகாரனும் ஒரே பேர்ல லேசான பெயர் மாற்றத்துடன் வெவ்வேறு பற்பசைகளை உப்பு போட்டு சக்கரை போட்டு விக்கறானுங்க. உதாரணத்துக்கு Pepsodent, pepsodent-g, pepsodent 2 in 1, pepsodent total gumcare. colgate plain, colgate total, colgate gel, colgate germi check, colgate sensitive. 

என்ன பேஸ்டு-ங்க வந்தாலும் நம்ம  கோபால் பல்பொடிக்கு ஈடாகுமா? அந்த காலத்துல எங்க தாத்தா வீட்டுக்குப் போனா ஒரு பொட்டலம் கோபாலை எடுத்துக்கிட்டு அப்படியே தேய்க்கிற மாதிரி காலை டிபனா பொட்டலம் முழுசையும் வாயில கமுத்துடுவோம்.`இந்தியா. இலங்கை,மலேஷியா ஆகிய நாடுகளில் மக்களின் பேராதரவை பெற்றது கோபால் பல்பொடி. உங்கள் பற்களை முத்து போல பிரகாசிக்க செய்வது கோபால் பல்பொடி`ன்னு ஆல் இந்தியா ரேடியோ வேறு ஒரு பக்கத்தில் முழங்கும் போது வாயில் எச்சில் ஊறும். அப்பல்லாம் ஊருல பாதி பய ரோஸ் விரலோடதான் ஸ்கூலுக்கு வருவானுங்க.ஆனா 1431 பயோரியா பல்பொடி-னு ஒன்னு இருக்கும். காரம் ரொம்ப இருக்கும். அந்த காலத்திலேயே பாருங்க 1431-னு registration நம்பரோட வித்திருக்கான்.இப்ப இருக்கிற Baskin Robbins @ 31 போல.நஞ்சன்கூடு-ன்னு ஒரு பல்பொடி வரும். காட்டம்தான். என்ன பேஸ்டில் உள்ள mouthwash பல்பொடியில இருக்காது. அப்ப பேஸ்ட்-னு பாத்தீங்கன்னா colgate-ம் forhans-ம் தான். பலபேரு அப்ப வேப்பங்குச்சிதான். இன்ஜெக்க்ஷன் பல்பொடி-னு ஒன்னு `ஆடும் பல் அசையாது` என்ற logo-வோடு வரும். அது உண்மையிலேயே ஈறுகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.பேஸ்ட் சோப் விஷயத்துல நம்ம நாட்டுக் கம்பெனிங்க பன்னாட்டு கம்பெனிகளிடம் தங்களது market ஷேர்-ஐ இழந்து வருடக் கணக்காகி விட்டது. அதனால்தான் அவன் ஆறு ரூபாய்க்கு பேஸ்ட் பண்ணி அதை இரண்டு ரூபாய்க் குழாயில் அடைத்து அதை இருபது ரூபாய் செலவு செய்து விளம்பரப் படுத்தி நம்மிடம் அறுபது ரூபாய்க்கு விற்கிறான். நான் எங்கள் வங்கியில் சில வருடங்கள் ஒரு co-op ஸ்டோருக்கு in-charge ஆக இருந்த போது ஒரு பைசா கூட சம்பாதிக்காத ஒரு ஊழியரின் வெத்து வேட்டு கணவர் `நான் மாசா மாசம் பிரஷ்-ஐ மாத்திடுவேன்`என்று சொன்னதும் எனது பறந்து விரிந்த பிரஷ்-ஐ அவனிடம் காண்பித்து இதை எப்ப மாத்தணும்-னு கேக்க ஆசையா இருந்தது.

ஒருமுறை எங்கள் வீட்டுக்கு பாட்டி வந்தபோது பல் தேய்த்து விட்டு வந்து` நல்லா நுரை வருது. ஆனா வாயெல்லாம் எரியுது`ன்னார். அய்யோ பாட்டி எதுல தேச்சே-னு நாங்க கேட்க அவர் காண்பித்தது palmolive ஷேவிங் கிரீம். அதுலேர்ந்து பாட்டி பேரு `பாமாலிவ் பாட்டி`.

சோப்பு மேட்டர்-லயும் இதே கதைதான். Lifebuoy- சோப்ப ரெண்டா வெட்டிக்கொடுத்த பரம்பரையில வந்த நம்ம வாரிசுகள் இப்போ குளிப்பதோ dove சோப்பில்தான். சாதாரணமா ஒரு வாளித் தண்ணியில குளிக்கிறோம்னா dove-க்கு ரெண்டு வாளி. அவ்வளவு கொழ கொழா. அப்பல்லாம் சினிமா கொட்டாய்க்கு போனாதான் advertisement-லாம் பாக்கலாம்.`ஆரோக்கிய வாழ்வினைக் காப்பது லைபாய். லைபாய் எவ்விடமோ ஆரோக்கியம் அவ்விடமே.` `அழுக்கிலுள்ள கிருமிகளைக் கழுவிக் களைகிறது லைபாய் சோப்` அப்படினு அலறுவான். அப்போ எனக்கு திடீர்னு ஒரு சந்தேகம் வரும். அழுக்கிலுள்ள கிருமிகளைத்தான் கழுவி களையும் போல இருக்கு. அழுக்கு அப்படியே இருக்கும் போல-ன்னு. கார்பாலிக் சோப்பு-ங்கறதால லைபாய் கரையவே கரையாது.நுரையும் வராது.ரெண்டு மாசம் ஆனாலும் அப்பிடியே கல்லு கணக்கா இருக்கும். ஒரு முறை காது அடைத்துக்கொண்ட நண்பர் ஒருவரை டாக்டரிடம் அழைத்து சென்றபோது `என்ன சோப் use பண்றீங்க-ன்னு அவர் கேட்க இவர் சந்திரிகா என்றார்.நொறைனா உங்களுக்கு ரொம்ப பிடுக்குமா `என்று டாக்டர் கேட்டவுடன் எனக்கு சிரிப்பு வந்து விட்டது. ஆமா சந்திரிகாவுல நுரை நிறையா வரும். ஆனா காரம் மூக்கில ஏறும்.பொம்மனாட்டிங்க சோப்பு போட்டு குளிக்கிற advertisement லாம் லிரில் சோப்பு வந்தப்புறம்தான்.அந்த அம்மா லா-ன்னு பாடிக்கிட்டு உற்சாகமா குளிக்கிறது இன்னும் காதிலேயே நிக்குது. இப்ப லிரில் இருக்கிற இடத்தைக் காணோம். புவனாவுடன் எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆன புதிதில் எங்கள் வீட்டுக்கு அவள் அண்ணன் வந்த போது பேச்சு வாக்கில் புவனா மைசூர் சாண்டல் சோப்-தான் use பண்ணுவா-ன்னு சொன்னவுடன் நான்`அய்யய்யோ சோப்பையெல்லாம் இங்க வந்தா மறந்துட சொல்லுங்க.இங்கெல்லாம் பயத்த மாவுதான்`-னு போட்டு விட்டவுடன் பார்ட்டி பயந்தே போயிட்டார். சில பேரு குழந்தைய பஜ்ஜி போண்டா-வுக்கு use பண்ற மாவையெல்லாம் போட்டு குளிப்பாட்டுவாங்க. ஜான்சன் பேபி சோப் போட்டு இப்பல்லாம் குழந்தைகளை குளிப்பாட்ரதில்ல. சில பெரியவங்க அதை போட்டு குளிக்கிறதானுலதான் அதுக்கு இன்னும் மார்க்கெட் இருக்கு. சோப் விஷயத்துல நன் ,கைலாஷ் லாயல்டி maintain பண்றோம்.நான் ஹமாம், அவன் பியர்ஸ் [ the only handmade soap-னு unilever சொல்லுவான். இப்ப எப்படியோ]. அப்பல்லாம் ஊருக்கு போறவன் எவன் சோப்பு பிரஷ் பேஸ்ட்-லாம் கொண்டு போவானுங்க. போற இடத்துல இருக்கிறத சந்தோஷத்தோட use பண்ணுவானுங்க.

பின் குறிப்பு: உங்க பேஸ்ட்-ல உப்பு இருக்கா-னு மிரட்டியவுடன் மிரட்சியோட டக்குனு சேனலை நான் மாத்தினா அதுல `உங்க உப்புல அயோடின் இருக்கா`னு ஒருவர் அலற அப்படியே சாஞ்சு உக்காந்துட்டேன்.

Sunday, March 20, 2011

நாஞ்சில் நாடன் திருச்சி பாராட்டுவிழா











திருச்சியில் உயிர் எழுத்து சார்பாக நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.திரு.வேணுகோபாலன்,திரு.ந.முருகேச பாண்டியன்,திரு.சுதிர் செந்தில்,திரு.தேவேந்திர பூபதி,திரு.நந்தலாலா,திரு.அமுதன் அடிகளார் ஆகியோர் சாகித்ய அகடெமி விருது பெற்ற கும்ப முனியை வாழ்த்தி பேசினர்.ஏற்புரையை தனக்கே உரித்தான பாணியில் பகடி கலந்து நாஞ்சில் நிகழ்த்தினார்.

Wednesday, December 22, 2010

கும்பமுனிக்கு ஒரு அங்கீகாரம்











எனது ஆதர்ச எழுத்தாளர் திரு.நாஞ்சில் நாடனுக்கு சாகித்திய அகடெமி விருது வழங்கப்பட்ட செய்தி ஏதோ நானே அந்த விருதைப் பெற்றது போன்ற மகிழ்ச்சியை தந்தது. நாஞ்சில் அதைப் பெற்றுக்கொள்வதன் மூலம் அந்த விருதுக்குத்தான் பெருமை. மேலும் பல சிறந்த படைப்புகளைக் கொடுத்து இதனினும் மேலான விருதுகளைக் குவிக்க எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

Sunday, March 7, 2010

போலிச்சாமியாரும் சன் டிவியும்



சமீபத்தில் தமிழகத்தில் பெரும் எழுச்சியை உண்டாக்கிய சன் டிவி-யின் நித்யானந்த சாமிகள் [ சாமிகள் என்ற அடைமொழி இனியும் தேவையா? ] பள்ளியறைக் காட்சி ஒளிபரப்பு எனக்கு நித்யானந்தா செய்ததை விட சன் டிவி ஒளிபரப்பிய விதமே எரிச்சலை தந்தது. இது போன்ற காட்சிகளை படம் பிடிக்க அங்கங்கே ஆட்களை புகுத்தும் ஒரு கும்பல் படப்பிடிப்பு முடிந்தவுடன் சம்பத்தப்பட்ட நபரிடம் பெருந்தொகை கேட்டு மிரட்டுகிறது. பேரம் படியாவிட்டால் ஏதாவது தொலைக்காட்சி சேனலுக்கு அந்த படப்பிடிப்பு சிடியை விற்றுவிடுவதும் அதை வாங்கும் தொலைக்காட்சி சேனல் அந்தக் கண்றாவியை ஒளிபரப்பி தன் ரேட்டிங்கை எகிற வைப்பதும் தெரிந்ததுதான். சினிமாக்களுக்கெல்லாம் A, UA சர்டிபிகேட் தர ஒரு சென்சார் போர்டு இருப்பது போல தொலைகாட்சி சேனல்களுக்கு இல்லாதது சன் டிவி போன்றவர்களுக்கு ரொம்ப வசதியாகப் போய்விட்டது. இது மாதிரி ஏதாவது ஒளிபரப்ப கிடைத்தால் சன் டிவிக்கு குஷிதான். ராத்திரி 10மணிக்கு காமிக்கப் போறதுக்கு காத்தால 6மணியிலிருந்தே கத்த ஆரம்பிச்சுடுவான். “ பிரபல சாமியாரின் கிளுகிளுப்பூட்டும் படுக்கையறைக் காaaaaட்சிகள். பிரபல நடிகையும் சிக்கினார். இன்று இரவு 10மணிக்கு காணத்தவறாதீர்கள்” னு கூவுவான். இதுல நடுவுல சான்ஸ் கிடச்சா விளம்பரம் போடப்பாப்பான் கேடுகெட்ட ஹிந்துஸ்தான் லீவர். விளம்பர இடைவேளைக்குப் பிறகு சாமிகளின் லீலைகள் தொடரும்னு சொல்லுவான். ஒரு விஷயத்தில் சன் டிவி-யை பாராட்ட வேண்டும். குப்பை படத்தைக் கூட கத்தியே ஓட வச்சிடுவான். திருட்டு விசிடி எடுத்தவனுக்குக் கூட நஷ்டத்தை கொடுத்த முதல் படம் ஜக்குபாய். அந்த ஜக்குபாயைக் கூட “ இந்திய தொல்லைக்காட்சி வரலாற்றிலேயே திரைக்கு வந்து சில மணி நேரங்களே ஆன புத்தம்புது தமிழ்த் திரைப்படம் ஜக்க்க்க்கூகூகூகூபாஆஆய்”னு கத்தியே காசு பாத்துடுவான். தமிழ்நாட்டு மக்கள் 90சதவீதம் பேர் ஒரு நாளைக்கு ஒரு தடவையேனும் சன் டிவி-யை பாத்துடறான். அரசு கொடுத்த இலவச டிவியால் பெரும்பலன் சன் டிவிக்குதான். சன் டிவி உதவி இல்லாமல் இனி தமிழ்நாட்டில் ஒரு கட்சி ஆட்சிக்கு வருவது கஷ்டம்தான். அந்த அளவிற்கு மக்கள் அதோடு ஒன்றிப் போய்விட்டனர். நித்து ஒளிபரப்புக்குப் பின் அதோட ஷேர் விலை ரூபாய் ஏறிட்டதாய் புரோக்கர் சொன்னார். ஜக்குபாய் இணயதளத்தில் வெளியான பிறகு சரத்குமார் கருணாநிதியை சந்தித்து புலம்பியதாகவும் அதற்கு அவர் கவலைப்படாம படத்தை ரீலிஸ் பண்ணு. நான் வேணா படம் ஆரமிக்கரத்துக்கு முன்னாடி பத்து நிமிஷம் பேசறேன்னு சொன்னாராம். படத்தை விட அது இன்னும் கொடுமை. இவர் எழுதிய பெருச்சாளியின் ஓசைக்கு கிடைத்த லட்சக்கணக்கான பணத்தில் ஒரு பகுதியை ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு செலவழிக்கிறாராம். எந்த தயாரிப்பாளர் ஐந்து நாள் கூட ஓடாத ஒரு படத்தின் வசனகர்த்தாவுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கிறானோ? அப்படின்னா நடிகர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு எவ்வளவு கொடுத்திருப்பான்? எவ்வளவு நஷ்டப்பட்டிருப்பான்? காதுல பூ சுத்தரானுங்க. இந்த பணம்லாம் யாருதுன்னு நமக்கு தெரியாதா? இவர்கள் தப்பான வழியில் சம்பாதித்த பணத்தை படம் எடுத்து தானும் நஷ்டப்பட்டு மக்களையும் கஷ்டப்படுத்துகிறார்கள். சன் டிவிக்கோ கலைஞர் டிவிக்கோ தைரியம் இருந்ததால் ஒரு தீபாவளிக்கோ அல்லது பொங்கலுக்கோ அவங்க டிவில உளியின் ஓசையைப் போடச்சொல்லுங்க பாப்போம். ஒரு பய பாக்கமாட்டான். கையில் கிடைத்த படத்தையெல்லாம் தாறுமாறாக விமர்சனம் செய்யும் எழுத்துலக விபச்சாரி சாரு நிவேதிதா போன்றவர்கள் ஏன் உளியின் ஓசை போன்ற படங்களுக்கு விமர்சனம் எழுதுவதில்லை?

சாமியார்கள் சும்மா இருக்கும்போதே அர்ச்சனை செய்யும் கருணாநிதி நித்யானந்தா ஒளிபரப்பின் மூலம் சன் டிவி ஏதோ லஷ்மணன் கோட்டை தாண்டிவிட்டதைப் போல் நீலிக்கண்ணீர் வடிக்கிறார். ஒரு வேளை படம் கலைஞர் டிவிக்கு கிடைக்காமல் சன் டிவிக்கு கிடைத்துவிட்டதே என்ற கடுப்பாயிருக்கும்.

நித்யானந்தா சமாச்சாரத்திற்குப் பிறகாவது மக்கள் சாமியார்கள் பின்னால் செல்வதைக் குறைக்க வேண்டும். இந்த மாதிரி மார்க்கட்டு [read as market] போன நடிகைகளுடன் கெட்ட காரியங்கள் செய்வதை விட சாமியார்கள் பேசாமல் கல்யாணம் செய்து கொள்வது உத்தமம். இதில் சம்பத்தப்பட்ட நடிகை முன்னால் நடித்த படங்களில் கிடைத்த புகழை விட இந்தப் படத்தில் அதிகம் சம்பாதித்துவிட்டார். இது போன்ற ஈன காரியங்களைச் செய்வதை விட பேசாமல் இந்த சாமியார்கள் கல்யாணம் செய்து கொண்டு இறைப்பணியில் ஈடுபடலாம். வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஜீயர் ஸ்வாமிகள் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டு இறைப்பணியும் செய்கிறார்கள். அது போல் சைவ சம்பிரதயத்திலும் செய்ய வேண்டியதுதான். இல்லையென்றால் இது போன்ற போலி சாமியார்களால் சமயத்திற்கு இழுக்கு வந்துவிடும். நித்யானந்தாவிற்கு ரெண்டாயிரம் கோடி சொத்தாம். ஏண்டா இப்படி பணத்தை என்ன பண்றதுன்னு தெரியாம இப்படிப் பட்ட ஆட்கள்கிட்ட கொட்றிங்க. இதோ ஒரு நல்ல விஷயத்துக்காக தமிழ்ச்செல்வன் பணம் அனுப்ப சொல்லியிருக்கார். நண்பர் நாகநாதன் மூலமா எனக்கு தெரிய வந்தது. முடிஞ்சா இதுக்கு பணம் அனுப்பு. புண்ணியமாப் போவும்.

http://satamilselvan.blogspot.com/2009/10/blog-post.html


என்னைப் பொறுத்தவரையில் வாழ்க்கையில் காஞ்சி மஹாப்பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி சாமிகளைத் தவிர வேறு எவரையும் சாமியாராக ஏற்றுக்கொண்டதில்லை. உணவு பழக்க வழக்கம் உட்பட எல்லாவற்றிலும் ஒரு எளிமையைக் கடைபிடித்து வாழும் கடவுளாக இருந்தார். இனியாவது இந்த மாதிரியான போலி சாமியார்கள் பின்னால் போய் பணத்தை வீணடிக்காமல் நல்ல புத்தகங்களை வாங்கிப் படித்து உபயோகமாக நேரத்தை மக்கள் கடத்தலாம்.

“புவனா, வாழ்க்கையே வெறுத்துப் போச்சு.பேசாம சாமியாராப் பூடலாம்னு பாக்கறேன்” னு பொண்டாட்டிக் கிட்ட சொன்னேன்.

“ சும்மா அலையாதீங்க ” ன்னு அவ சொல்லிட்டா
.

Monday, February 23, 2009

ஸ்லம்டாக் மில்லியனர்

ஸ்லம்டாக் மில்லியனர்க்கு எட்டு ஆஸ்கர் கிடைத்ததில் மகிழ்ச்சி.அதிலும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு.ஏற்கனவே ஆஸ்கர் விருது பெறத் தகுதியான படங்கள் தமிழ்,மலையாளம் மற்றும் வங்க மொழிகளில் வந்துள்ளன.ஆனால் உலக அளவில் அவற்றை கொண்டு சென்று பேச வைக்க நமக்கு சரியான அமைப்பு இல்லை.இல்லையென்றால் நம் கமலஹாஸனும்,அடூர் கோபாலகிருஷ்ணனும் மிருணாள்சென்னும் எப்போதோ ஆஸ்கர் வாங்கியிருப்பார்கள்.ரஹ்மான் விருது வாங்கியதன் மூலமாக இசைக்கு மொழி கிடையாது என்பதை நிரூபித்துள்ளார்.

Monday, January 19, 2009

டயரி படுத்தும் பாடு


ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுது நியூ இயர். டயரி குமிய ஆரம்பிச்சிட்டுது.முதலிலெல்லாம் நாம டயரி தீவிரமா எழுத துடிச்ச போது ஒன்னும் ஒசியில பேராது.



நாலஞ்சு வருஷமா வர்ர மொத டயரிய நம்ம மகர் கைலாஷ்க்கு கொடுத்துரது. அவரும் தீவிரமா முத பத்து நாள் முனைஞ்சு எழுதுவார். என்ன விஷயம் இருக்கும்னு நினைக்கிறீங்க? அன்னைக்கி வாசல்ல இருக்கிற ஆறடி பிட்ச்சிலே ஒன்றரை உழக்கு பையனோட 240ரன் எடுத்ததா எளுதியிருப்பான். அதிலே 20 சிக்ஸர் 30 four-னு எளுதியிருப்பான். இதுல எப்பவாது ஞாயிற்றுக்கிழமை வீட்டுல இருந்தா அப்பா வாப்பா வாப்பான்னு 4 மணியிலிருந்தே அரிக்க ஆரம்பிச்சுடுவான். அன்னிக்கி டயரில அப்பா ஆறாவது பந்திலே 4ரன்னுக்கு அவுட்னு எழுதியிருப்பான்.ஒரு தரம் நம்ம தங்கை பையனும் கைலாஷோட குருவுமான விக்னேஷ் லால்குடி வந்திருந்தபோது கைலாஷை நிக்க வச்சு 980ரன் எடுத்துட்டான். பாவம் பையன் நொந்து பூட்டான். சாயந்திரம் நான் ஆபீசிலிருந்து வந்தவுடன் சொன்னான். ஊர் மானத்தையே வாங்கிட்டியேடான்னேன்.ஒரு ஞாயிற்றுக்கிழமை இப்படித்தான் வாப்பா கிரிக்கெட் விளையாடன்னு கைலாஷ் நச்சரிக்க நம்ம சகதர்மிணியம்மா புவனா சப்போர்டுக்கு வந்துட்டா.அவளுக்கு என்னமோ நான்தான் ஏபிடி அனுமார் மாதிரி பேங்கையே தாங்கறேன்னு நெனைப்பு. அப்படி ஒரு buildup நாம கொடுத்து வச்சிருக்கோம்ல. பாவம்டா அப்பா. இன்னிக்கி ஒரு நாள்தான் ரெஸ்ட். ரொம்ப தொந்தரவு பண்ணாதேன்னா. பையன் மூஞ்சி அப்படியே தொங்கி போச்சு. உடனே நான் பையன்கிட்ட கேட்டேன். மச்சி காலையல ஹிண்டு பேப்பர் பாக்கலயா. அதுல sports pageல Ace cricketer Muralidharan hangs his boots.Announces retirement from first class cricketனு வந்திருக்குன்னு சொன்னேன். பய அவ்வளவுதான் வெறியாய்ட்டான். கைலாஷுக்கு இன்னும் மனசுக்குள்ள என்ன வருத்தம்னா நான் அவனோட கிரிக்கெட்டிங் டேலன்டை மதிக்கலைன்னு. கொஞ்சம் கோச்சிங் கீச்சிங்னு போயிருந்தா நிச்சயம் இண்டியன் டீமுக்கு செலக்ட் ஆயிருப்போம்னு நெனப்பு. டென்டுல்கருக்கு சமதையான ப்ளேயர் நாம. இந்தாள் இப்படி நம்ம கேரியரையே ஸ்பாயில் பண்ணிட்டான்னு நெனப்பு.



போன வாரம் சிங்கப்பூர்ல செட்டிலாய்ட்ட நம்ம தம்பி மகர் பத்து வயசு ஹரீஷ்ட்ட பேசலாம்னு கூப்ட்டாக்க நான் ரொம்ப டயர்டா இருக்கேன்னான். ஏன்டான்னாக்க. சாயந்திரம் ஒரு சைனாக்காரப்பையனை நிக்க வச்சு 152ரன் எடுத்தேன் அதாங்கறான். அப்பிடி போடு அருவாளை. அண்ணன் அஞ்சடி பாய்ஞ்சா தம்பி பத்தடி பாயரான்யா. போடா வருங்கால சிங்கப்பூர் கிரிக்கெட் கேப்டன் நீதான்டான்னு சொன்னேன். பையன் அப்படியே சிலுத்து போய்ட்டான் பெரியப்பாவோட தீர்க்கதரிசனத்தை நெனச்சு. ஆறு வயசு வரைக்கும் அம்மண குண்டியாய் அலைஞ்ச பயலுவல்லாம் என்னா குதி குதிக்கறான் பாருய்யா. மேலே உள்ள போட்டோவில் உள்ளவர்தான் ஹரீஷ்.லால்குடியில் இவர் பேட்டிங் பிடிக்கும்போது க்ளீன் போல்ட் தவிர ஏனைய அவுட்டுகளை எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை.அப்படியே முதல் ஆறெழு பந்தில் அவுட்டானால் ட்ரையல் அல்லது நோ பால் என்பார்.இது குறித்து நடக்கும் பஞ்சாயத்தின் போது ஆறு செவுத்துக்கு அப்புறம் உள்ள பாத்ரூமிலிருந்து தாத்தா வெளியே வந்து ஆமாம் நான் பார்த்தேன்.நோ பால்தான் என்று பேரன் மனம் குளிர தீர்ப்பு சொல்வது வழக்கம்.அதே போல பேட்டிங் பிடித்து முடித்தவுடன் ஹரிஷுக்கு அசாத்திய கால்வலி வந்து பீல்டிங்கை புறக்கணிப்பது வழக்கம்.மீண்டும் அவர் பாட்டிங் டர்ன் வந்ததும் கால் வலி பறந்தோடிவிடுவது வழக்கம்.



பையன் கைலாஷ் டயரில என்னதான் எழுதிருக்கான்னு சும்மா படிச்சுப் பாத்துட்டு பேச்சு வாக்கில எதையாவது அதிலிருக்கறதை மறதியாய் சொல்லிட்டோம்னா போச்சு. நீ படிச்சுட்ட. நீ எதுக்கு என் டயரிய படிச்சன்னு பெரிய ரகளை உட்டுருவான். என்னமோ ராணுவ ரகசியங்களெல்லாம் வெளியாயிட்ட மாதிரி. இந்த வருஷம் அய்யா 10th CBSE board எக்ஸாம் எழுதறார். கௌண்ட் டவுன் டு போர்டு எக்ஸாம்-னு டயரி டெய்லி எழுதறார். பாப்போம் என்ன மார்க் வாங்கறார்னு. நாம படிச்சதை விட நல்லாதான் படிக்கிறார். ஆனா பொது அறிவு மாத்திரம் கொஞ்சம் கம்மி. நண்பர் சேகர்ட்ட பேசிக்கிட்டிருக்கும்போது சொன்னேன் இன்னும் அப்பாவுக்கு முழுத் திருப்தியா படிக்கிற பையன் உலகத்திலே பிறக்கலைனு.

Bitter Half புவனா ஒவ்வொரு வருஷமும் எல்லா நல்ல டயரியயும் பையன்கிட்டயே கொடுத்துடறீங்க. எனக்கும் ஒன்னு கொடுங்கன்னு தாண்டு தாண்டுன்னு தாண்டினாள். சரின்னு கொடுத்தேன். பின் ஒரு நாள் என்ன எழுதியிருக்கிறாள் என்று பிரட்டிப்பார்த்தால் ஒரே பண்ணாத சமையல் குறிப்புகள் மற்றும் எப்போதும் போடப்போகாத கோலங்கள் அப்புறம் அவ friend-டோட நாத்தனாரோட பக்கத்து வீட்டுக்காரியோட பேத்தி அட்ரஸ்.அந்த டயரி இதுக்காகவா நான் பொறந்தேன்னு என்னப்பாத்து அழுத மாதிரி இருந்தது. அப்புறம் யாரோ கொடுத்த ஒரு சமையல்கார மாமியின் போன் நம்பர். தெவசத்திற்க்கு சமைக்க ஒரு மாமி தேவைப்பட்டு அந்த நம்பருக்கு ஒரு தடவை போன் பண்ணியபோது பேசியவர் அந்த மாமி போய் நாலு திவசம் கூட ஆயிடுத்தே என்றார். வீட்டுல இன்னொரு குழந்தை இல்லையே என்ற கவலையே வேண்டாம்.அம்மாவும் பையனுமே அடிச்சிக்கும்க. புடவைய மடிச்சுக் கட்டாத கொறதான்.


சிறு வயதில் எழுத ஒரு டயரி கிடைக்காத ஒரு ஆபீஸ் நண்பர் இப்போது வாடிக்கையாளர்களுக்கு டயரிகளாக விசிறியடித்துக் கொண்டிருக்கிறார்.ஆனால் அவருக்கு இப்போது டயரி எழுத நேரமில்லை.

Sunday, January 18, 2009

சிங்கம் ஒன்று புறப்பட்டது

அப்புறம் எவ்வளவு நாள்யா இப்படியே இருக்க சொல்றே? நாம எழுதறத எந்த பத்திரிக்கைக்காரனும் போடமாட்டேங்கராய்ங்க. நம்மளாலயும் தனியா பத்திரிக்கையும் ஆரம்பிக்க முடியாது. அதான் பாத்தேன். இந்த blog-ஐ நேத்து ராத்திரி நல்ல முகூர்த்தத்தில ஆரம்பிச்சுட்டேன். பையனும்,நண்பர்களும் வேற நீ பேசறதையெல்லாம் அப்படியே எழுதினின்னா தமிழ் கூறும் நல்லுலகம் புல்லரிச்சுப் போகும்னு சொன்னாங்க.அதான் பட்டய கிளப்ப ஆரம்பிச்சுட்டேன்.