Saturday, December 20, 2014

சாகித்ய அகாடமியின் சறுக்கல்

இந்த வருட சாகித்ய அகாடமி விருதுக்கு பூமணியின் அபத்த களஞ்சியம் 'அஞ்ஞாடி' தெரிவு செய்யப்பட்டுள்ள
து பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. இது இமயம், கண்மணி குணசேகரன் போன்ற எழுத்தாளர்களுக்கு செய்யப்பட்ட பெரும் துரோகம். இரு வருடங்களுக்கு முன் இந்த ஆயிரம் பக்க புத்தக வாசிப்பு முடித்தவுடன் அது ஒரு பெரும் சலிப்பையும் நேர விரய ஆத்திரத்தையுமே கொடுத்தது. அத்துடன் சில நாட்களுக்கு புத்தகங்களை தொடவே அச்சமாக இருந்தது. கதையின் எந்த ஒரு கட்டத்திலும் மண்வாசனையோ அந்த நாளைய வாழ்க்கைச் சூழலோ சரியாக சொல்லபபட்டிருக்கவில்லை என்பதே உண்மை. புதிரை வண்ணார்களைப் பற்றிய சிறந்த கதை 'கோவேறு கழுதைகள்`தானே தவிர அஞ்ஞாடி அல்ல. இதை எந்த தமிழ் இலக்கியவாதியும் ஒத்துக்கொள்வான். நான் எந்த புத்தகத்தையும் படிக்க நீண்ட நாள் எடுத்துக்கொண்டதில்லை இதைத் தவிர. கதை நடுவில் பிறண்டு நடுவில் ஒரு சரித்திர பாட புத்தகம் படிப்பது போன்று இருந்தது. விருதுக்கு தகுதியான புத்தகங்களே ஒரு வருடத்தில் இல்லாது போனால் வழங்காமல் விட்டு விடலாமே. இமையத்தின் திமுக சார்பு நிலைப்பாடு அகாடமி அவருக்கு விருது கொடுப்பதை தடுக்கிறதோ? ஒரு காலத்திலும் அவர் அரசியலையும் இலக்கியத்தையும் கலந்ததில்லை. பார்க்கப் போனால் அவர் சார்ந்துள்ள கட்சியே அவரை கொண்டாடியிருக்க வேண்டும். அது நடக்கப் போவதில்லை.

Thursday, February 13, 2014

அஞ்சலி- பாலு மகேந்திரா- ஒ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா


தமிழ் திரையுலகம் ஒரு மிகப் பெரும் ஆளுமையை இழந்து விட்டது. எனது ஆதர்ச இயக்குனர்களில் ஒருவர். சினிமாவையே சுவாசித்து வாழ்ந்தவர். அவர் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட வைர வாரிசுகள் பலர். `அழியாத கோலங்கள்` மூலம் தமிழில் இயக்குனர் அவதாரம் எடுத்து தமிழனுக்கு சினிமாவின் புதிய பரிமாணங்களை காட்டியவர். சின்ன சின்ன விஷயங்களில்கூட அவருடைய touch இருக்கும்.

ஏறக்குறைய சினிமா உலகிலிருந்து ஓய்வு பெற்று விட்டார் என என் போன்றோர் எண்ணிக்கொண்டிருந்தபோது `தலைமுறைகள்` மூலம் நடிகனாகவும் அவதரித்து பரவசப்படுத்தினார்.

பாலுவுக்கும்,இசைஞானி இளையராஜாவுக்கும் இடையே மற்றவர்களுக்கு பெரும் பொறாமையூட்டும் ஒரு அதீத நட்பு அலைவரிசை ஓடிக்கொண்டிருந்தது இன்று காலை வரையில். பாலுவின் படங்களுக்கு மட்டும் அதி உன்னத பாடல்களையே இளையராஜா எப்போதும் தரும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். மிகப் பெரிய வெற்றிக் கூட்டணி. உதாரணத்திற்கு சில பாடல்கள்-

மூன்றாம் பிறை - கண்ணே கலைமானே

நீங்கள் கேட்டவை - ஒ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா

மறுபடியும் - நலம் வாழ எந்நாளும் நல்வாழ்த்துக்கள்

மறுபடியும் - எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு

மூடுபனி - என் இனிய பொன் நிலாவே


இரட்டை வால் குருவி- ராஜ ராஜ சோழன் நான் 

அழியாத கோலங்களில் வரும் `நான் என்னும் பொழுது ஏதோ சுகம் ஏதோ தினம்` பாடலை கேட்கும் போதெல்லாம் நான் அப்படியே சமைந்து போய்விடுவேன். மொழி கடந்த பெரும் இசை மேதை சலீல் சௌத்ரி பாலுவுக்கேன்றே தொடுத்த அற்புதமான பாடல். மகேந்திரன் இயக்கிய`முள்ளும் மலரும் `படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பாலுவின் மேதமை இளையராஜாவின்` செந்தாழம்பூவில் வந்தாடும்`பாடலில் வெளிப்படும். அந்த பாடலில் ஷோபா வெளிப்படுத்தும் முக பாவங்கள் நிச்சயம் பாலுவின் கைவண்ணம்தான் என்பதை அடித்து சொல்லுவேன். ஜானிக்கும் அவர்தான் ஒளிப்பதிவு. மழையில் ஸ்ரீதேவி பாடுவது போன்ற ஜானகியின் குரலில் வந்த `காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுது` பாடல் காலத்தைத் தாண்டி இன்றும் முன் நிற்கிறது.

இவரது வீடு படம் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையை அருமையாக பதிவு செய்திருந்தது. பாலு மகேந்திராவின் `கதை நேரம்` தொலைக்காட்சி தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்ற இயல்பான ஒன்று.

தமிழ் சினிமா ரசிகனை வேறு ஒரு தளத்திற்கு இட்டுச் சென்றதில் பாலு மகேந்திராவின் பங்கு முதன்மையானது. அவரது ஆத்மா சாந்தியடைய தலைமை ரசிகனின் பிரார்த்தனைகள்.

பன்னீரைத் தூவும் மழை.. சில்லென்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இந்நேரமே..
என் நெஞ்சில் என்னென்னவோ வண்ணங்களாடும் நிலை
என்னாசை உன்னோரமே..
வெண்ணீல வானில்.. அதில் என்னென்ன மேகம்
ஊர்கோலம் போகும்.. அதில் உள்ளாடும் தாகம்
புரியாதோ என் எண்ணமே.. அன்பே..

Tuesday, February 11, 2014

குடித்ததில் பிடித்தது



குடித்ததில் பிடித்தது 

சில பானங்களின் மணமும், சுவையும் நம் நாவில் தொடங்கி சிறு வயதிலேயே மனதிலும் பதிந்து விடுகின்றன. அப்படி என்னுள் நீண்ட நாள் உறைந்திருந்தது Woodwards Gripe water. அதன் மணமும் சுவையும் என்னைப் பொறுத்தவரை unique-தான். கைலாஷ் குழந்தையாக இருந்தபோது வயிற்றுவலி என்று சொன்னவுடன் என் அம்மா சாதாரண வலிதான் Dr.கிட்ட போக வேண்டாம்.Woodwards Gripe water வாங்கிண்டு வா. ரெண்டு ஸ்பூன் குடுத்தா சரியாயிடும்-னு சொன்னவுடன் வாங்கி வந்தேன். பாட்டிலைத் திறந்தவுடன் அந்த மணம் என்னை இழுத்தது. கைலாஷ் குடித்த இரண்டு ஸ்பூன் போக பாக்கி 250 ஸ்பூனையும் நானே ஆசை தீர குடித்தேன். எனக்கு தெரிந்து நீண்ட நாட்களாக packing [ நீல நிற கவர் ] மற்றும் பாட்டில் அமைப்பு அதில் ஒட்டப்பட்டுள்ள sticker மற்றும் font-கள் மாறவேயில்லை. சில பொருட்களே இப்படி தன் தனித்துவத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளன.[ LG பெருங்காயம் கட்டி, Sunlight சோப் ]. Brand value நிபுணர்கள் அவசியம் கவனிக்க வேண்டிய விஷயம் இது. கவரை மாத்தி காசு பண்ணலாம் என்பதெல்லாம் மாயைதான். திருச்சி டவுன் கிளையில் நான் பணியாற்றிய பொழுது எல்லார் கண்ணையும் கட்டி கையை நீட்ட சொல்லி ஆளுக்கு ரெண்டு ஸ்பூன் Woodwards Gripe water-ஐ ஊற்றி என்னன்னு கண்டுபிடிங்கன்னு சொன்னவுடன் எல்லோரும் சரியாக சொன்னதுடன் அதன் சுவையை என்னைப் போலவே சிலாகித்தார்கள். நான் open-ஆக வாங்கி குடித்துவிட்டேன். அவர்களுக்கு தயக்கம். நான் வாங்கிக் குடுத்து அவர்கள் ஆசையையும் நிறைவேற்றி வைத்தேன்.




பண்ணையாரும் பத்மினியும்- திரை விமரிசனம்



இரண்டு நாள் வங்கி வேலை நிறுத்தம். ஆனால் நீண்ட நேரம் வெய்யிலில் நீங்கள் சில நாட்கள் நிற்கக் கூடாது என Dr. கண்டிப்பான உத்தரவு போட்டிருந்ததால் காலையில் நடந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள போகவில்லை. முன்னெல்லாம் வேலை நிறுத்தம் என்றால் ஊதியம் அடிபடும் என சிலர் முணுமுணுப்பர். ஆனால் இப்போதெல்லாம் இதைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை. இந்த ஓய்வை விரும்பி வரவேற்கின்றனர். அந்த அளவுக்கு work pressure. நான் இந்த இரண்டு நாட்களும் புவனாவை வெளியே கூட்டி சென்று திருப்தி படுத்த முடிவெடுத்தேன்.

திங்களன்று காலை tiffin மோனிஷா-விலிருந்து பார்சல். மதியம் சாப்பட்டிற்குப்பின் city center Inox-ல் பண்ணையாரும் பத்மினியும். Inox-ஐ தமிழில் ஐநாக்ச் என்று எழுதியிருப்பது எரிச்சலை உண்டு பண்ணியது. புவனா பையில் சாமார்த்தியமாக வீட்டிலிருந்து கைமுறுக்கை கடத்தி தியேட்டருக்குள் கொண்டு வந்தது திருப்தியளித்தது. மாலை அங்கேயே window shopping. அப்புறம் அப்படியே கிளம்பி மயிலை காரணீஸ்வரர் கோவில், மயிலை ஷீரடி சாய்பாபா கோவில், கபாலீஸ்வரர் கோவில். சாய்பாபா கோவிலில் சுடசுட வெண்பொங்கல் மற்றும் கபாலீஸ்வரர் கோவிலில் சக்கரைப்பொங்கல் புளியோதரை என்று சிக்கனமாகவே கதையை முடித்தேன்.

மதியம் சாப்பாட்டுக்குப் பின் தூக்கம் கண்ணை சுழட்டியது. தியேட்டரில் சுமார் 50 பேர். [50*120-Rs.6000]. படம் ஆரம்பிக்குமுன் advt. அந்த காலத்தில் ஒரே படம் இரண்டு தியேட்டரில் வந்தால் அந்த தியேட்டரிலிருந்து படச்சுருள் வரவரத்தான் படம் போடப்படும். அதுமாதிரி வரவேண்டியுள்ளதோ என எனக்கு சந்தேகம். நிறைய போட்டு படுத்தி எடுத்து விட்டார்கள். சரி படத்திற்கு வருகிறேன்.

ஒரு சிறுகதையை எப்படி ஒரு திரைப்படமாக மாற்றுவது என்பதை இந்த படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். பத்மினி வரும் முதல் காட்சி ஒரு ஹீரோ enter ஆவதுபோல் காட்டியிருப்பது அட்டகாசம். பண்ணையார் எந்த பந்தாவும் இல்லாமல் ஊர் மக்களை தன் குடும்பத்தை போலவே நடத்துவது மனதுக்கு இதம் தருகிறது. ஊர் பசங்களிடம் நான் வந்ததும் எல்லாரும் ஏறிக்கலாம்னு அன்பாக சொல்வதும் இதம்தான். எழவு வீட்டிற்கு கார் அனுப்புவதோடு இல்லாது அதில் body-ஐயும் ஏற்றிச் செல்ல அனுமதிப்பது ஒரு புதிய அனுபவம். குளிச்சிருந்தான்னா இவனையும் கூட்டி போகலாம் என பண்ணையார் பீடையைப் பார்த்து சொல்லும்போது தியேட்டரில் குபீர்.

படத்தின் கதாநாயகி என்றால் பண்ணையாரின் மனைவியைத்தான் சொல்லவேண்டும். அவர் கண் மொழி அற்புதம். கணவர் மேல் அவர் வைத்திருக்கும் காதல் கண்ணில் வழிகிறது. தம்பதிகளுக்குள் இருக்கும் நெருக்கம் நெகிழ வைக்கிறது.பண்ணையார் மனைவி வாழ்ந்திருக்கிறார் படத்தில். வண்டியை ஓட்ட கத்து கொடுத்தால் வேலையை விட்டு எடுத்து விடுவார்களோ என்ற அச்சத்தில் விஜய் சேதுபதி முழுதும் கற்றுக் கொடுக்காமல் டபாய்ப்ப்தும், அடிக்கடி பண்ணையார் ஒண்ணு ஆக்சலரேட்டர், இரண்டு ப்ரேக் அந்த மூணாவது என்னப்பா என்று கேட்டு கிளட்ச் என்று தெரிந்து கொள்வதும் நல்ல சிரிப்பு. கார் மீது பண்ணையாருக்கு அதீத காதல் என்றால் அவர் மனைவிக்கும், விஜய் சேதுபதிக்கும் அதே அளவு கார் மீது பாசம்.

காவி கோடுகள் போட்ட பழைய ஒட்டு வீடு, மாட்டு வண்டி, வாசலில் வாழை மரம், வைக்கப்போர் என அசல் கிராமத்து வீடு கண்முன். Premier padmini காலத்து அண்ணாமலை சினிமா போஸ்டர் என எல்லாம் கச்சிதம். சேதுபதி இறந்தவர் வீட்டில் பெண்ணை அப்படி காதலாக நிறைய நேரம் பார்ப்பது அருவருப்பையே தருகிறது. அவர் காதலியாக வரும் பகுடர் போடாத பெண் கண்ணாலேயே கதைகள் பல சொல்கிறார். படத்தின் பலம் பீடை. அவர் முன்னாடி உட்கார ஐந்து ரூபாய் கேட்பதும் அதை சேகரித்து பையன் வரும் போது கார் வேறு இடத்துக்கு போய்விடுவதும் பின் சில வருடம் கழித்து பெரியவனான பிறகு சொந்த காரில் ஊருக்கு வந்து பழைய ஞாபகங்களில் திளைத்திருக்கும்போது சேதுபதி TCX 1104-ல் வந்து `உங்க காரா? இல்லன்னா நான் டவுனுக்குத்தான் போறேன் .வாங்க எனகூப்பிடுவதும் நான் முன்னாடி சீட்டுல உக்காந்துக்கவா என கேட்டு பயணிப்பதும் நெகிழ்ச்சி.

படத்தில் மற்றபடி பெரிதாக சொல்ல எதுவுமில்லை. குறைகளுமில்லை. கொஞ்சம் ஜவ்வு போல இழுத்திருக்கிறார்கள்.கொட்டாவி வரவில்லை.

Friday, February 7, 2014

அடையாளம் துறந்தவன்



சமீபத்தில் பதவி உயர்வு பெற்று Managaer [Branch Operations]-ஆக Madras University State Bank கிளையில் பொறுப்பெற்றுக் கொண்டது என் குடும்ப உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்தாலும் எனக்கு அது பலவிதங்களில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட அனுபவத்தையே கொடுத்துள்ளது என்பதை மறுக்க முடியாது. பேரிழப்பு என்று சொன்னால் என் பேர் சொல்லி கூப்பிடும் என் சக ஊழியர்களை முற்றிலுமாக இழந்து தனிமைப்படுத்தப் பட்டுவிட்டேன். Accountant என்ற பதவியின் பெயரால் மட்டுமே வங்கியில் ஊழியர்களாலும் வாடிக்கையாளர்களாலும் அழைக்கப்படுவது அவர்களிடமிருந்து ஒட்டாது விலகி இருக்கும் ஒரு உணர்வை உண்டாக்கி தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நிலைக்கு என்னை கொண்டு சென்று விட்டது. இப்படியே போனால் என் பேரே எனக்கு மறந்துவிடும் போலுள்ளது. அதுக்குதான் officer ஆனா visiting card-லாம் அடிச்சிக்கறாங்களோ? முரளி, முரளி சார், இலால்குடி முரளி சாரா என்று நாலு திசையிலும் திருச்சி கிளையில் ஒலித்த குரல்கள் பழங்கதையாகிவிட்டது. மேலும் பதவி உயர்வு இலக்கிய உலகினுடனான என் தொடர்பை முற்றிலுமாக துண்டித்துவிட்டது என்றே சொல்லலாம். சிற்றிதழ்கள் சென்னையில் எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை. யாராவது தகவல் சொன்னால் திருவல்லிக்கேணி திருநெல்வேலி போளி ஸ்டால் போளி courier-ல் அனுப்பி வைக்கப்படும். தபால் செலவு தனி. புத்தக கண்காட்சி அருகாமையில் தொடங்கிவிட்டது. வாங்க பணமிருந்தாலும் படிக்க நேரமில்லை. கண்டிப்பாக இந்த முறை வழக்கத்தைவிட அதிக புத்தகங்கள் வாங்கபோகிறேன் படிக்க நேரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில். கடல் காற்று ஒவ்வாமையால் சற்றே என் உடல்நலத்தையும் தொலைத்தேன். சென்னையில்தான் அடையாளத்தைத் தொலைத்து விட்டேன் என்று நினைத்தால் சொந்த ஊரிலும்தான். 20 ஆண்டுகள் நான் உருண்ட அறையை இழந்துவிட்டேன். இந்த முறை பொங்கலுக்கு ஊருக்கு வந்தபொழுது 22 வருடம் வசித்த வீட்டிற்கு ஒரு விருந்தாளியைப் போல் வந்த உணர்வு இருந்தது. அப்பா அம்மா பக்கத்தில் இல்லாமல் 50 வயது குழந்தை ஏங்குகிறது என்று புவனா சென்னையில் சொல்வது ஒரு விதத்தில் சரிதான். அவர்களும் அங்கு வந்தால்தான் ஒரு நிறைவு வரும். நம்பிக்கைதான். நடக்கும். இவ்வளவு மனக்கசப்பைக்கொடுக்கும் பதவி உயர்வு தேவையா? என்ன செய்வது. நானும் ஒரு பண விரட்டிதான். எல்லா வசதியும் கொடுக்கறாங்க.அனுபவிக்க நேரமில்லை. ஆசையில்லை. 24மணி நேரம் ஒரு நாளைக்கு என்பதை எப்படியாவது அதிகம் பண்ணச் சொல்ல வேண்டும்.

அடைக்காத கடன்களை விட.........




ஐபிஎல் என்னும் மாயச்சக்கரம்


ஒவ்வொரு வருடமும் இப்போது ஏப்ரல் மே வந்தால் ஐபிஎல் என்னும் முரட்டு கிரிக்கெட் போட்டித் தொடர் அதீத விளம்பரத்துடன் பெரு நகரங்களில் காட்சிப்படுத்தப்படுகிறது. இது பெரும் பணம் பண்ணும் தந்திர விளையாட்டுத் தொடர்.இந்த தொடர் நடக்கும் இரு மாதங்களும் உலக அளவில் எந்த டெஸ்ட் தொடர்களோ அல்லது ஒரு நாள் போட்டிகளோ நடத்தப்படுவதில்லை.காரணம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கனமான கல்லாப்பெட்டி.கிரிக்கெட் நிர்வாகம் உலக அளவில் ICC கட்டுப்பாட்டில் உள்ளது என்று யாராவது சொன்னால் அது கட்டுக்கதை. BCCI சொல்வதுதான் சட்டம் என்பது DRS விஷயத்திலேயே வெளிப்படை.நாளைக்கு மூணு ஸ்டம்ப் வேணாம் ரெண்டு போதும்னு BCCI சொன்னா உடனே தலையாட்ட வேண்டிய கட்டாயம்.ஒரு காலத்தில் இந்த விளையாட்டில் வெள்ளையர்களின் ஆதிக்கம்[ஒரு காலத்தில் அவுஸ்த்ரேலியாவில் ஓவருக்கு எட்டு பந்து] இருந்தது போய் இப்போது இதை தன் சந்தைப் படுத்தும் திறனால் BCCI தன் வசமாக்கிக் கொண்டு ஆட்டிப் படைக்கிறது.

இங்கு திருவல்லிக்கேணியில் நம் இல்லத்துக்கு அருகில் வசிக்கும் முன்னாள் சர்வதேச நடுவர் [ முன்னாள் ஸ்டேட் வங்கி வூழியரும் கூட] நம் பெயர் கொண்ட முரளி அவர்கள் செவ்வாய் நான் மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்த போது இன்று கடைசி போட்டி சென்னையில் கண்டிப்பாக பாக்கறீங்க மனைவியுடன் என்று வற்புறுத்தி மூன்று டிக்கெட்டுகளைத் திணித்தார். இதற்கு முன் இவர் சென்னையில் நடந்த போட்டிகளுக்கு கொடுத்த டிக்கெட்டுகளை கீழே இருக்கும் சிறுவர்களுக்கும் அலுவலக நண்பர்களுக்கும் கொடுத்து என் பொன்னான நேரத்தை காத்தேன்.நான் போக வில்லை என்பதை அவரிடமே வெளிப்படையாக ஒப்புக் கொண்டேன்.புவனாவுக்கு இந்த கிரிக்கெட் சமாச்சாரத்தில் எல்லாம் அவ்வளவு ஈடுபாடு இல்லை. இன்னும் கல்லா மண்ணா, பாண்டி,ஐஸ் பாய்,குச்சி விளையாட்டு என்ற அளவிலேயே நிபுணத்துவம் கொண்டவர்.இரவு எட்டு மணிக்கு தொடங்கும் போட்டிக்கு நான் வீட்டுக்கு வந்து டிபன் முடித்து எட்டு மணி வாக்கில் வீட்டிலிருந்து கிளம்பி நடந்து சேப்பாக்கம் சென்று பரிசோதனைகள் முடிந்து உள்ளே செல்லும்போது கிட்டத்தட்ட ஐந்து ஓவர்கள் முடிந்து விட்டன. ஒரு பக்கம் CHEER GIRLS-களின் அலங்கோல ஆட்டம்.அதை வாய் பிளந்து பார்க்கும் கூட்டம்.இவர்கள் ஆடும் ஆட்டத்திற்கும் கிரிக்கெட் ஆட்டத்துக்கும் என்ன சம்பந்தம். அந்த காலம் முதல் இந்தியர்களுக்கு சினிமா என்றால் ஒரு கவர்ச்சி நடனம் கட்டாயம் இருந்தாக வேண்டும்.அது ஹிந்திப் படமானாலும் தமிழ்ப் படமானாலும் சரி.இந்தியர்களின் இந்த WEAKNESS-ஐ நன்றாக புரிந்து கொண்டு BCCI கோஷ்டி இதை அமுல் படுத்திவிட்டது.இவர்கள் வீட்டுப் பெண்களை இப்படி ஆட விடுவார்களா? அப்புறம் மைதானத்தில் காதைப் பிளக்கும் அளவுக்கு குத்துப் பாட்டுக்கள் ஒலிபரப்பப் பட்டு அதற்கு ஆபாச நடனம் ஆடும் ரசிகர் கூட்டம் பெண்கள் உட்பட. தலையில் முள்ளம்பன்றி போல கலர் கலராக மலிங்கா பாணியில் ஒரு கூட்டம்.கன்னத்தில் தங்கள் அபிமான அணியின் லோகோவை பெயிண்ட்டில் வரைந்து அலையும் கூட்டம் ஒன்று.இதை சுரண்டி எடுக்க இரண்டு நாளாகும்.எனக்கு பக்கத்தில் தன கணவர் மகனுடன் வந்திருந்த ஒரு 45 வயது பெண்மணி வாய்க்குள் இரு விரலை விட்டு விசிலடித்த காட்சி என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.திடீரென ஒரு பெண் போட்ட ஆபாச குத்தாட்டம் கிரிக்கெட்டிலிருந்து கவனத்தை திருப்பியது. அப்போது சேவாக் அவுட்டாகி திரும்ப அவர் எப்படி அவுட்டானார் என என் பக்கத்திலிருந்த அலுவலக ஊழியரைக் கேட்க அவர் தெரியாதென சொல்ல இந்த பக்கம் இருந்த இன்னொருவரைக் கேட்க அவர் நான் பாக்கலீங்க என அசடு வழிந்தார்.இதிலே ஏற்பாட்டாளர்கள் மைக்கில் தோனிக்கு ஒரு விசில் போடுங்க குசு போடுங்கன்னு ஒரே அலப்பரை.மைதானத்தில் வளம் வரும் உணவுப் பொருட்களின் விலையோ பயங்கரம்.ஒரு கப் பெப்சி 40ரூபாய் சப்பாத்தி 60ரூபாய் பிஸ்ஸா 350ரூபாய்.வெளியிலிருந்து உணவுப் பொருட்கள் கொண்டு வர அனுமதி இல்லை.தமிழகத்தில் நிலவும் கடும் மின் பற்றாக்குறையிலும் பன்மடங்கு மின்சாரத்தை குடிக்கும் மைதானத்தின் ராட்சச இரவு விளக்குகள் உறுத்தின.இவர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு நூறு ரூபாய் போடலாம்.மூன்று மணி நேரத்தை வீணடித்த கவலையோடு கசகசவென வீடு திரும்பினேன்.இவ்வளவு சொல்றே ஏன் போனே என கேட்பவர்களுக்கு என் காலத்து நாயகன் கபில் தேவ் சொன்னதை சொல்கிறேன்`We will have to learn the ways of a brothel`.போட்டி டிக்கெட்டுகளின் ஆரம்ப விலை 750.உச்ச விலை 6000க்கும் மேலே.டிக்கெட்டுகள் அனைத்து விற்பனையாவதில்லை.முன் நாட்களில் டிக்கெட் எடுப்பவர்கள் முட்டாள்கள்.போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னால் மஞ்சள் சட்டை அணிந்த வாலிபர்கள் டிக்கெட்டுகளை கையில் அடுக்கிக்கொண்டு எவ்வளவு வச்சிருக்கே?எறநூரா இந்தா.அண்ணே நூறு ரூபாதான் இருக்கு.கொண்டா போ உள்ளே.இப்படி இதன் மூலம் கருப்பு வெள்ளையாகுதோ?ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

இதற்கு நடுவில் இன்று வெளியான match fixing விவகாரம் ஐபிஎல்-ன் விகார முகத்தை காண்பித்துவிட்டது.இது குறித்து நான் முன்னர் சொன்னபோது கைலாஷ் போன்றவர்கள் நம்பவில்லை.இப்போது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.ஐபிஎல்-ஆல் சில நன்மைகள்தான்.அதிகம் அறியப்படாத ஆட்டக்காரர்கள் வெளிச்சத்துக்கு வருவது.உதாரணம் பின்னி,விஸ்வநாத்.டிராவிட் போன்றவர்களின் இன்னும் தொடரும் form.தீமைகளோ பல.டெஸ்ட் கிரிக்கெட்டை அடியோடு அழிக்க வல்ல ௨௦-௨௦ ஆட்ட போட்டிகள்.இரு மாதங்கள் சிறுவர்களின் அறிவுத் தேடலை அழிக்க வல்ல கிட்டத்தட்ட அறுபது போட்டிகள் கொண்ட தொடர்.

IPL என்னும் மாயப் பேயைக் கொன்று போட வேண்டும்,
இல்லை என்ற போது எந்தன் மூச்சு நின்று போக வேண்டும். ஐபிஎல் போட்டிகளுக்கு அதீத முக்கியத்துவம் கொடுப்பதை பத்திரிகைகள் நிறுத்த வேண்டும்.நவ்ஜோத் சித்து போன்ற கூச்சல் போடும் கோமாளிகளை சேனல்கள் புறக்கணிக்க வேண்டும்.