Friday, February 7, 2014

6174- புத்தக விமரிசனம்

புத்தகம் : 6174

எழுதியவர் : கஸ்தூரி சுதாகர்

வெளியீடு : வம்சி பதிப்பகம்

விலை : Rs.3௦௦

6174 என்ற நாவல் குறித்து என் சகோதரர் ராஜேஷ் சிலாகித்து எழுதப்பட்ட மின்னஞ்சல் ஒன்றை அனுப்பிய அடுத்த நாள் வம்சிக்கு போன் செய்தேன். பவா.செல்லத்துரைதான் எடுத்தார்.` உங்கள் வங்கி கணக்கு எண் சொல்லுங்கள். பணம் அனுப்புகிறேன். 6174 ஒரு பிரதி அனுப்பிக் கொடுங்கள்` என்றேன். `பணம் இருக்கட்டும் முதலில் உங்கள் முகவரியைச் சொல்லுங்கள்.இன்றே அனுப்பி வைக்கிறேன்` என்றார். புத்தகமும் வந்தது. படிக்காமலே இரண்டு மாதம் வைத்திருந்தேன். உடல் நலம் தேற மருத்துவ விடுப்பில் ஓய்வு எடுக்கும்பொருட்டு சென்னை வந்திருந்த கைலாஷ் படிக்க ஏதாவது புத்தகம் வேண்டி கேட்க 6174-ஐ கொடுத்தேன். படித்துவிட்டு அருமை என்றான். பொங்கலுக்கு இலால்குடியில் போணி பண்ணிவிட வேண்டியதுதான் என நான் பையில் வைத்துக்கொண்டேன்.

நாவல் நன்கு விறுவிறுப்பாக எழுதப்பட்ட ஒன்று. தமிழில் ஒரு சீரிய முயற்சி. ஆசிரியர் சுதாகருக்கு பாராட்டுகள். Dan Brown-ன் பாதிப்பு நாவல் முழுவதும் விரவிக் கிடக்கிறது. சுஜாதா இருந்திருந்தால் சுதாகரைக் கொண்டாடியிருப்பார். அருமையான விமரிசனம் கொடுத்து `எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகம்` என அடையாளம் காட்டியிருப்பார். சுலபத்தில் புத்தகக் கண்காட்சியில் லட்சம் பிரதி விற்றிருக்கும். இதே ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தால் மில்லியன் கணக்கான விற்பனையை எதிர்கொண்டிருக்கும். எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் இதைப் படிக்க ஆலோசனை சொல்லலாம். கொஞ்சமும் ஆபாச கலப்பு இல்லை.

+கள்

அனகோண்டா பெயர்க்காரண விளக்கம் அற்புதம். நாவலின் அசாத்திய வேகம் வாசகனை பிரமிக்க வைக்கிறது. கோலத்தில் இவ்வளவு விஷயமா? எனக்கு கோலம்னாலே மைக்கேல்மதனகாமராஜனில் பாட்டி பேசும்` என் பேத்தி வாசல்ல கோலம் போட்டுண்டிருந்தா. இந்தப் படுபாவி அலங்கோலம் பண்ணிட்டான்`-ங்கிற கிரேசியின் வசனம்தான் ஞாபகத்துக்கு வரும். `சுடலை` போன்ற அடித்தட்டு மக்களின் பெயர்களை பாத்திரங்களுக்கு சூடியிருப்பது வரவேற்புக்குரியது. 6174 நம்பர் குறித்த விளக்கம் நிஜத்தில் புல்லரிக்க வைக்கிறது. வாசகன் கண்டிப்பாக பேனா எடுத்து சரி பார்ப்பான். `ஹெர்மோப்ரோடைட்` `லோனார் லேக்` போன்ற பிரயோகங்கள் கூகுள் பார்க்கத் தூண்டும். கதை தன் முழு வேகத்தை லோனாரில் எடுக்கிறது. ரவி பாத்திரம் ஆரம்பத்திலேயே இவர்களுக்கு சமதையாக Jeffrey Archer-ன் A Matter of Honour-ல் வருவதுபோல் அமைத்திருந்தால் இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்கும். கத்தி, இரத்தம்,வன்முறை குறைவு. பிரமிட் குறித்து நான் கேள்விப்பட்டதெல்லாம் அதற்குள் எதை வைத்தாலும் அதன் ஆரம்ப நிலையை அடையும் என்பதுதான். உதாரணத்துக்கு ஒரு பழைய சவரம் செய்த blade-ஐ பிரமிடுக்குள் வைத்தால் அது ஒரு நாளில் மீண்டும் சவரம் செய்யும் அளவுக்கு புதியதாக உருமாறிவிடும் என்பது போன்றவைதான். ஆனால் இந்த கதையில் பிரமிடுகள் பிரமிக்க வைக்கின்றன.

-கள்

விளிம்புநிலை வாசகர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு பத்தி பிரித்தல் படுமோசம். ஆரம்ப கட்டங்களில் அனந்துவும்,ஜானகியும் புதிர் முடிச்சுகளை அவிழ்க்கும் வேகம் MGR படங்களை நினைவூட்டுகிறது. காதுகொடுத்து பொறுமையாக விஷயங்களை கேட்காமல் எப்போதும் சலித்துக் கொண்டேயிருக்கும் மெத்த படித்த கதைமாந்தர்களை படைத்திருப்பது வாசகனுக்கு வெறுப்பையூட்டுகிறது. சாரங்கன் போன்ற பத்திரங்கள் பெரும் எதிர்பார்ப்பைக் கொடுத்து புஸ்-ஆகிவிடுகின்றன.. அடிக்கடி வெளியே போய் போன் பேசும் தேவராஜ் குறித்து சாதாரண என் போன்ற வாசகர்களுக்கே சந்தேகம் வரும்போது சடகோபன்&TEAM-க்கு சந்தேகம் வராதது நெருடலே.

400 பக்கங்களுக்கு மேற்பட்ட விஞ்ஞான புனைவு என்பது சாதரணமாக எல்லோருக்கும் கைகூடும் விஷயமல்ல. அதுவும் தமிழில். படிப்பு ஆர்வம் இப்போது குழந்தைகளிடத்து குறைந்து வருவதை இது போன்ற அறிவியல் புனைகதைகளை படிக்கத் தூண்டுவதன் மூலம் நிவர்த்திக்கலாம். இதன் வீச்சை பரவலாக்குவது நம் கையில்தான். தன் தின சம்பாத்தியத்தின் பெரும் பகுதியை டாஸ்மாக்கில் இழக்கும் தந்தைகளையே அதிக அளவில் கொண்டுள்ள நம் தற்போதைய சமூகம் இந்த புத்தகங்களையா தன் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும்?


`OFFICE` என்ற அசத்தல் தொலைக்காட்சி தொடர்



பொதுவாகவே தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பதில் எனக்கு என்றுமே பெருவிருப்பம் இருந்தது இல்லை. மாமியார்களையும், அழகு சுந்தரங்களையும் [அடியாட்கள்] பார்த்து வெறுப்பே மிஞ்சியது.மக்களின் ரசனையை நினைத்து வேதனைதான் பொங்கியது. ஆனால் சில நாட்களுக்கு முன்னர் தினம் புவனா இரவு பத்து மணிக்கு மேல் ஏதோ தொடர் பார்ப்பதும் தொடர்ந்து கலகலவென்று சிரிப்பதுமாக இருந்தது அறையில் புத்தகம் படித்துக் கொண்டிருந்த என் காதில் விழுந்த வண்ணம் இருந்தது. அப்படி என்ன அதில் இருக்கிறது என்று ஒரு நாள் பார்க்க உட்கார்ந்தேன். கலகலப்புக்கு பஞ்சமே இல்லை. இன்றைய அலுவலக சூழல் அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவின் வெடிச்சிரிப்பு,நொடிக்கு நூறு தரம் மச்சான் மச்சான் என்று அவர் சகாக்களை விளிப்பது,கார்த்திக்கின் காந்தக்குரல்,ராஜியின் அப்பாவித்தனம் எல்லாம் யதார்த்தமாக இருப்பது புத்துணர்ச்சியை பார்ப்பவர்களுக்கு தருவது நிதரிசனம். இவற்றுக்கெல்லாம் சிகரமாக தொடரில் இருக்கும் விஷயங்களாக எனக்கு படுபவை இரண்டு.








1. விஸ்வநாதனின் மேலாண்மை குணாதிசயங்கள். அவருடைய பதவிக்கேற்ற கம்பீரமான முடிவெடுக்கும் திறன், தன் கீழ் பணியாற்றுபவர்களை நன்கு தெரிந்து வைத்திருக்கும் திறன், அவர்கள் மீது அவர் வைத்துருக்கும் அசாத்திய நம்பிக்கை, ஒவ்வொருவரையும் அவர் எடை போடும் திறன், கம்பெனியின் முன்னேற்றத்தை பற்றி எந்நேரமும் சிந்திக்கும் தன்மை, பணியாளர்களை ஒருங்கிணைத்து அவர்களின் வேலைப் பாதுகாப்பிலும் உறுதி காட்டுவது போன்றவை அந்த பாத்திரத்தின் மேல் பெரிய அளவில் மரியாதையை உண்டு பண்ணுகின்றன. இவர் பாத்திரம் மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது என்பதை அவர் பெயரில் இப்போது விளம்பரங்கள் வெளியாவதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

2. லஷ்மி. இவர் முகத்தில் எப்போதும் ஒருவித புத்துணர்ச்சி. குரலோ கற்கண்டும் அதி மதுரமும் கலந்த ஒன்று. இளமைத் துள்ளல் நிரம்பிய இவர்தான் என்னைப் பொறுத்தவரை தொடரின் நாயகி. நிஜப்பெயர் மதுமிலா. இயல்பான அழகி.

மதனாக வருபவரும் அசத்துகிறார் அப்பாவியாக. அவர், அவர் காதலி மற்றும் அவர்களுடைய அலுவலகத்தோழி TRACK`ம் நன்றாகவே உள்ளன.

குறைகளும் உள்ளன. HR MANAGER விஸ்வநாதனிடம் பேசும்போதெல்லாம் உள்ளுக்குள்ளேயே தனியாக பேசுவது தொடர்வது மலின உத்தி. HARDWARE TEAM-ஆக வரும் குடி கும்பலின் பிதற்றல்கள் பெரும் பலவீனம். LAPTOP மற்றும் PROJECT விஷயங்களில் ராஜி மீண்டும் மீண்டும் அலட்சியமாக இருப்பதாக காட்டுவது இயல்பாக இல்லை.

எனக்குத் தெரிந்து 25 ஆண்டுகளுக்கு முன்னால் ஒளிபரப்பப்பட்ட `நுக்கட்` என்ற ஹிந்தி தொடருக்கு கிடைத்த அமோக வரவேற்புக்கு இணையான ஒன்றை `OFFICE` பெற்றுள்ளதாகவே எண்ணுகிறேன். மற்ற தொலைக்காட்சி சேனல்களுக்கு பெரும் எரிச்சலையும்,பயத்தையும் இந்த தொடர் கொடுத்திருப்பது கண்கூடு. ஒளிபரப்பப்படும் நேரம் [10-10.45] கூட யாரையும் முணுமுணுக்க வைப்பதில்லை. `OFFICE` தொடர் ஒரு `STRESS RELEIVER`ஆக பெரும்பாலானவர்களை மகிழ்ச்சியுடன் உறங்க அனுப்பி வைக்கிறது. பாலு மகேந்திராவின் கதை நேரத்திற்குப் பின் எந்த தொடரும் என்னை எழுதத் தூண்டியதில்லை. TEAM OFFICE-க்கு என் வாழ்த்துக்கள். MAY THIS TRIBE INCREASE.

Sunday, December 15, 2013

பாரதி மெஸ்

இலால்குடி பினாத்தல்கள்

திருவல்லிக்கேணி என்றாலே நினைவுக்கு வருவது பார்த்தசாரதி கோவிலும், பாரதியார் இல்லமும்,மேன்ஷன்களும்தான். இந்த மேன்ஷன்களில் ஆயிரக்கணக்கான வெளியூர்வாசிகள் வேலை நிமித்தம் தங்கியுள்ளனர். இவர்களுக்கு அறை நன்றாக அமைகிறதோ என்னவோ சாப்பாட்டைப் பற்றி துளியும் கவலைப்படத் தேவையில்லை. திருவல்லிக்கேணியை Bachelor`s Paradise என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இருக்கும் இங்கு உள்ள தரமான உணவகங்களின் உணவு வகைகள். இங்கு சாப்பிடுவோருக்கு பாக்கெட்டிலோ,குடலிலோ ஓட்டை விழ வாய்ப்பில்லை.நான் சென்னைவாசியாகி ஜாகை பார்த்து மூன்று மாதம் கழித்துதான் புவனாவை கூட்டி வந்தேன்.அதுவரை என்னைப் பார்த்துக்கொண்டது மெஸ்கள்தான்.கைலாஷும்,என் தங்கை பையன் விக்னேஷும் வந்து என்னோடு ஒரு வாரம் தங்கியிருந்து `மாமா நீ நல்லா Bachelor Life`ஐ enjoy பண்றேன்னு certificate கொடுத்தான். சில நாட்களாகவே இந்த மெஸ்கள் குறித்து எழுதும் எண்ணம் இருந்தது.இப்போதுதான் முடிந்தது.

பாரதி மெஸ்- The Pride of Tiruvallikeni

நான் Triplicane வந்து இரண்டாம் நாள்தான் பாரதி மெஸ்-ஐ பார்த்தேன். இரண்டு இட்லியும்,வெண் பொங்கலும் சாப்பிட்டேன்.பொங்கலில் ஏகப்பட்ட முந்திரி. பாரதியின் சுத்தம் என்னைக் கவர்ந்தது.சற்றே கவனித்தபோதுதான் கடை ஒரு கொள்கையோடு [principle] நடத்தப்படுவது தெரிந்தது.சுவரெங்கும் பாரதியின் அந்த கால தனி மற்றும் குடும்பப் படங்கள். பின்னணியில் மெலிதாக ஒலிக்கும் பாரதி பாடல்கள்.அலமாரியில் தள்ளுபடி விலையில் பாரதி புத்தகங்கள்.`தங்களுக்குத் தேவையில்லாத புத்தகங்களை இங்கே கொண்டு வந்து போடவும்` என்று ஒரு corner.இவ்வாறாக எல்லாவற்றிலும் புதுமை பாரதியில்.பாரதியின் வெண்பொங்கலுக்கு லேசான போதை தரும் வல்லமை உண்டு. பொதுவாக எனக்கு பூரி என்றால் ரொம்பஅஅஅஅஅஅ இஷ்டம். அதனால்தான் `தங்க மீன்கள்` படத்தில் குழந்தை `இன்னிக்கு எங்க அம்மா பூரி செய்றாங்க.அதனால நாளைக்கு குளத்துல இறங்கறேன்`னு சொல்லும்போது என் கண்ணில் லேசான கலக்கம். நம்ம ஜாதி-ன்னு பாசம்.தமிழ் நாட்டில் உனக்குப் பிடித்த டிபன் என்ன என்று நான்கு குழந்தைகளை கேட்டால் மூன்று குழந்தைகளின் பதில் பூரியாகத்தான் இருக்கும். பூரி ஏன் செட்-ஆகத்தான் வருகிறது [ஓட்டலில்] என்று என் ரொம்ப நாள் சந்தேகம் இன்னும் தீரவில்லை. அந்த நாட்களில் பள்ளிகளில் பூரி செட்டுக்காகவே NCC-ல் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்த கூட்டம் உண்டு. அந்த நாட்களில் எல்லாம் கல்யாணத்தில் பூரி மசால் போடும் பழக்கம் இல்லை.௨௦௦௦-த்தின் ஆரம்பத்தில் ஒரு கல்யாணத்தின் காலை டிபனில் பூரி மசாலை பதம் பார்த்தபின் மொய்க் கவரைப் பிரித்து மொய்யை அதிகப்ப்படுத்தினேன்.அந்த காலத்தில் சில ஓட்டல்களில் பூரி செட்டுக்கு மசால் வேண்டாம் சாம்பார் போதும் என்றால் `மூன்று பூரி`கொடுக்கும் ஒரு வழக்கம் அமுலில் இருந்தது.ஆனால் பூரிக்கு மசாலைத் தவிர வேறெதையும் என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இப்போது மைதா மாவினால் செய்யப்பட்டு [single-ஆக வரும்]உடலுக்கு எல்லா தீங்கையும் தரும் clone `சோலா பூரி`யை என்னால் ஏற்க முடியவில்லை.சரி பாரதிக்கு வருவோம்.பாரதியின் பூரி அப்பழுக்கிலாத அக்மார்க் ராகம்.கண் முன்னால் எண்ணெயிலிருந்து எடுக்கப்பட்டு கருப்பு துகள்கள் சற்றும் இல்லாதது.தொட்டுக்கொள்ள மசாலும் தேங்காய் சட்னியும்.பாரதியில் சாம்பார் சட்னி வகைகள் தேவையான அளவுதான்.extra கிடையாது.மதியம் சாப்பாடு உண்டு.தரமான சாப்பாடு 5௦ ரூபாய்க்கு கூட்டு காய் அப்பளம் சாம்பார் ரசம் மோர் வடை ஹாட்பேக்-ல் சாதம்.பார்சல் சாப்பாடு இலையுடன் 55 ரூபாய் சாதம் Horlicks pack போல அலுமினிய Foil-ல். இரவில் மீண்டும் டிபன் ரகங்கள். பாரதியின் சப்பாத்தியை தூக்கினால் அறுந்து விழுந்து விடும்.அவ்வளவு soft. தொட்டுக் கொள்ள கூட்டு.தயிர் வெங்காயம்,தக்காளி உருளை மசால்.[இங்கே 18 ரூபாய்.அருகிலுள்ள அடையாரில் இரண்டு சின்னது 45 ரூபாய். ஒரு முறை இரவு பாரதியில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்த போது மெஸ் உரிமையாளரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது காய்கறி விலைகள் கடுமையாக உயர்ந்திருந்த நேரம்.எப்படி விலை உயர்த்தாமல் கட்டுபடியாகிறது என்று நான் கேட்க `லாபத்தில் நஷ்டம்`என அடக்கமாக பதிலளித்தார். பாரதியில் வேலை பார்ப்பவர்களுக்கு நல்ல சம்பளம், நல்ல உணவு.இங்கு self service-தான்.உட்கார்ந்து சாப்பிடும் வசதி கிடையாது.இங்கு எட்டு மணிக்கு ஒரு நாள் வந்து மறு நாளும் எட்டு மணிக்கு வந்தால் முதல் நாள் பார்த்த முகங்களே முக்கால் வாசி இருக்கும்.புவனா ஊருக்கு போனால் காலை பாரதியில் இரண்டு இட்லி ஒரு பூரி செட் பக்கத்திலுள்ள சபரியில் ஒரு ஸ்ட்ராங் டீ என்பது என் வழக்கம்.பாரதியின் புது கிளை பாரதி பிறந்த நாளில் CNK- ரோடில் OPP  CHEPAUK-ல். பாரதி போன்ற உணவகங்களுக்கு அரசு பல சலுகைகளை தரலாம்.நான் சென்னையிலிருந்து மாற்றப்பட்டு பின் சென்னை வர நேரம்  போதெல்லாம் பாரதி வந்து கண்டிப்பாக ஒரு வேளை  சாப்பிடுவேன்.



















Monday, June 24, 2013

உங்க டூத் பேஸ்ட்டுல உப்பு இருக்கா?

இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் எந்த அறிபறியுமில்லாமல் மெதுவாக brush-ல் பேஸ்ட்-ஐ போட்டுக்கொண்டு சேரில் உக்காந்து டிவி-ஐ on செய்தேன். உடன் ஒரு பெண் `உங்க பேஸ்டில் உப்பு இருக்கா?` என்று ஏதோ ரசம் குழம்பில உப்பு இருக்கா என்று கேட்பது போல கேட்டவுடன் எனக்கு அதிர்ச்சி. `உப்பில்லா பண்டம் குப்பையில `என்று அந்த காலத்தில் பெரியவங்க சொன்னது பேஸ்ட்-க்கும் பொருந்துமா என்று குழம்பினேன். ஒரு வேளை பேஸ்ட்-ல்லாம் உப்பு போட்டுதான் தேய்க்கணுமா நம்ம பாட்டுக்கு வெறுமனேயே ரொம்ப நாளா தேய்க்கிறோமே என்று சந்தேகத்தில் tube முழுக்க தேடித் பாத்தா அப்படி ஒண்ணும் போடலை. இதெல்லாம் ஒரு மார்க்கெட்டிங் ஜிம்மிக்ஸ். ஏன்னா இப்பல்லாம் மக்களுக்கு loyalty இல்ல. மாத்திக்கிட்டே இருக்கணும்.ஒன்னே ஒண்ணுதான் மனுஷனால மாத்த முடியாது. அதனால்தான் ஒவ்வொரு கம்பெனிகாரனும் ஒரே பேர்ல லேசான பெயர் மாற்றத்துடன் வெவ்வேறு பற்பசைகளை உப்பு போட்டு சக்கரை போட்டு விக்கறானுங்க. உதாரணத்துக்கு Pepsodent, pepsodent-g, pepsodent 2 in 1, pepsodent total gumcare. colgate plain, colgate total, colgate gel, colgate germi check, colgate sensitive. 

என்ன பேஸ்டு-ங்க வந்தாலும் நம்ம  கோபால் பல்பொடிக்கு ஈடாகுமா? அந்த காலத்துல எங்க தாத்தா வீட்டுக்குப் போனா ஒரு பொட்டலம் கோபாலை எடுத்துக்கிட்டு அப்படியே தேய்க்கிற மாதிரி காலை டிபனா பொட்டலம் முழுசையும் வாயில கமுத்துடுவோம்.`இந்தியா. இலங்கை,மலேஷியா ஆகிய நாடுகளில் மக்களின் பேராதரவை பெற்றது கோபால் பல்பொடி. உங்கள் பற்களை முத்து போல பிரகாசிக்க செய்வது கோபால் பல்பொடி`ன்னு ஆல் இந்தியா ரேடியோ வேறு ஒரு பக்கத்தில் முழங்கும் போது வாயில் எச்சில் ஊறும். அப்பல்லாம் ஊருல பாதி பய ரோஸ் விரலோடதான் ஸ்கூலுக்கு வருவானுங்க.ஆனா 1431 பயோரியா பல்பொடி-னு ஒன்னு இருக்கும். காரம் ரொம்ப இருக்கும். அந்த காலத்திலேயே பாருங்க 1431-னு registration நம்பரோட வித்திருக்கான்.இப்ப இருக்கிற Baskin Robbins @ 31 போல.நஞ்சன்கூடு-ன்னு ஒரு பல்பொடி வரும். காட்டம்தான். என்ன பேஸ்டில் உள்ள mouthwash பல்பொடியில இருக்காது. அப்ப பேஸ்ட்-னு பாத்தீங்கன்னா colgate-ம் forhans-ம் தான். பலபேரு அப்ப வேப்பங்குச்சிதான். இன்ஜெக்க்ஷன் பல்பொடி-னு ஒன்னு `ஆடும் பல் அசையாது` என்ற logo-வோடு வரும். அது உண்மையிலேயே ஈறுகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.பேஸ்ட் சோப் விஷயத்துல நம்ம நாட்டுக் கம்பெனிங்க பன்னாட்டு கம்பெனிகளிடம் தங்களது market ஷேர்-ஐ இழந்து வருடக் கணக்காகி விட்டது. அதனால்தான் அவன் ஆறு ரூபாய்க்கு பேஸ்ட் பண்ணி அதை இரண்டு ரூபாய்க் குழாயில் அடைத்து அதை இருபது ரூபாய் செலவு செய்து விளம்பரப் படுத்தி நம்மிடம் அறுபது ரூபாய்க்கு விற்கிறான். நான் எங்கள் வங்கியில் சில வருடங்கள் ஒரு co-op ஸ்டோருக்கு in-charge ஆக இருந்த போது ஒரு பைசா கூட சம்பாதிக்காத ஒரு ஊழியரின் வெத்து வேட்டு கணவர் `நான் மாசா மாசம் பிரஷ்-ஐ மாத்திடுவேன்`என்று சொன்னதும் எனது பறந்து விரிந்த பிரஷ்-ஐ அவனிடம் காண்பித்து இதை எப்ப மாத்தணும்-னு கேக்க ஆசையா இருந்தது.

ஒருமுறை எங்கள் வீட்டுக்கு பாட்டி வந்தபோது பல் தேய்த்து விட்டு வந்து` நல்லா நுரை வருது. ஆனா வாயெல்லாம் எரியுது`ன்னார். அய்யோ பாட்டி எதுல தேச்சே-னு நாங்க கேட்க அவர் காண்பித்தது palmolive ஷேவிங் கிரீம். அதுலேர்ந்து பாட்டி பேரு `பாமாலிவ் பாட்டி`.

சோப்பு மேட்டர்-லயும் இதே கதைதான். Lifebuoy- சோப்ப ரெண்டா வெட்டிக்கொடுத்த பரம்பரையில வந்த நம்ம வாரிசுகள் இப்போ குளிப்பதோ dove சோப்பில்தான். சாதாரணமா ஒரு வாளித் தண்ணியில குளிக்கிறோம்னா dove-க்கு ரெண்டு வாளி. அவ்வளவு கொழ கொழா. அப்பல்லாம் சினிமா கொட்டாய்க்கு போனாதான் advertisement-லாம் பாக்கலாம்.`ஆரோக்கிய வாழ்வினைக் காப்பது லைபாய். லைபாய் எவ்விடமோ ஆரோக்கியம் அவ்விடமே.` `அழுக்கிலுள்ள கிருமிகளைக் கழுவிக் களைகிறது லைபாய் சோப்` அப்படினு அலறுவான். அப்போ எனக்கு திடீர்னு ஒரு சந்தேகம் வரும். அழுக்கிலுள்ள கிருமிகளைத்தான் கழுவி களையும் போல இருக்கு. அழுக்கு அப்படியே இருக்கும் போல-ன்னு. கார்பாலிக் சோப்பு-ங்கறதால லைபாய் கரையவே கரையாது.நுரையும் வராது.ரெண்டு மாசம் ஆனாலும் அப்பிடியே கல்லு கணக்கா இருக்கும். ஒரு முறை காது அடைத்துக்கொண்ட நண்பர் ஒருவரை டாக்டரிடம் அழைத்து சென்றபோது `என்ன சோப் use பண்றீங்க-ன்னு அவர் கேட்க இவர் சந்திரிகா என்றார்.நொறைனா உங்களுக்கு ரொம்ப பிடுக்குமா `என்று டாக்டர் கேட்டவுடன் எனக்கு சிரிப்பு வந்து விட்டது. ஆமா சந்திரிகாவுல நுரை நிறையா வரும். ஆனா காரம் மூக்கில ஏறும்.பொம்மனாட்டிங்க சோப்பு போட்டு குளிக்கிற advertisement லாம் லிரில் சோப்பு வந்தப்புறம்தான்.அந்த அம்மா லா-ன்னு பாடிக்கிட்டு உற்சாகமா குளிக்கிறது இன்னும் காதிலேயே நிக்குது. இப்ப லிரில் இருக்கிற இடத்தைக் காணோம். புவனாவுடன் எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆன புதிதில் எங்கள் வீட்டுக்கு அவள் அண்ணன் வந்த போது பேச்சு வாக்கில் புவனா மைசூர் சாண்டல் சோப்-தான் use பண்ணுவா-ன்னு சொன்னவுடன் நான்`அய்யய்யோ சோப்பையெல்லாம் இங்க வந்தா மறந்துட சொல்லுங்க.இங்கெல்லாம் பயத்த மாவுதான்`-னு போட்டு விட்டவுடன் பார்ட்டி பயந்தே போயிட்டார். சில பேரு குழந்தைய பஜ்ஜி போண்டா-வுக்கு use பண்ற மாவையெல்லாம் போட்டு குளிப்பாட்டுவாங்க. ஜான்சன் பேபி சோப் போட்டு இப்பல்லாம் குழந்தைகளை குளிப்பாட்ரதில்ல. சில பெரியவங்க அதை போட்டு குளிக்கிறதானுலதான் அதுக்கு இன்னும் மார்க்கெட் இருக்கு. சோப் விஷயத்துல நன் ,கைலாஷ் லாயல்டி maintain பண்றோம்.நான் ஹமாம், அவன் பியர்ஸ் [ the only handmade soap-னு unilever சொல்லுவான். இப்ப எப்படியோ]. அப்பல்லாம் ஊருக்கு போறவன் எவன் சோப்பு பிரஷ் பேஸ்ட்-லாம் கொண்டு போவானுங்க. போற இடத்துல இருக்கிறத சந்தோஷத்தோட use பண்ணுவானுங்க.

பின் குறிப்பு: உங்க பேஸ்ட்-ல உப்பு இருக்கா-னு மிரட்டியவுடன் மிரட்சியோட டக்குனு சேனலை நான் மாத்தினா அதுல `உங்க உப்புல அயோடின் இருக்கா`னு ஒருவர் அலற அப்படியே சாஞ்சு உக்காந்துட்டேன்.

Sunday, March 20, 2011

நாஞ்சில் நாடன் திருச்சி பாராட்டுவிழா











திருச்சியில் உயிர் எழுத்து சார்பாக நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.திரு.வேணுகோபாலன்,திரு.ந.முருகேச பாண்டியன்,திரு.சுதிர் செந்தில்,திரு.தேவேந்திர பூபதி,திரு.நந்தலாலா,திரு.அமுதன் அடிகளார் ஆகியோர் சாகித்ய அகடெமி விருது பெற்ற கும்ப முனியை வாழ்த்தி பேசினர்.ஏற்புரையை தனக்கே உரித்தான பாணியில் பகடி கலந்து நாஞ்சில் நிகழ்த்தினார்.

Wednesday, December 22, 2010

கும்பமுனிக்கு ஒரு அங்கீகாரம்











எனது ஆதர்ச எழுத்தாளர் திரு.நாஞ்சில் நாடனுக்கு சாகித்திய அகடெமி விருது வழங்கப்பட்ட செய்தி ஏதோ நானே அந்த விருதைப் பெற்றது போன்ற மகிழ்ச்சியை தந்தது. நாஞ்சில் அதைப் பெற்றுக்கொள்வதன் மூலம் அந்த விருதுக்குத்தான் பெருமை. மேலும் பல சிறந்த படைப்புகளைக் கொடுத்து இதனினும் மேலான விருதுகளைக் குவிக்க எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

Sunday, March 7, 2010

போலிச்சாமியாரும் சன் டிவியும்



சமீபத்தில் தமிழகத்தில் பெரும் எழுச்சியை உண்டாக்கிய சன் டிவி-யின் நித்யானந்த சாமிகள் [ சாமிகள் என்ற அடைமொழி இனியும் தேவையா? ] பள்ளியறைக் காட்சி ஒளிபரப்பு எனக்கு நித்யானந்தா செய்ததை விட சன் டிவி ஒளிபரப்பிய விதமே எரிச்சலை தந்தது. இது போன்ற காட்சிகளை படம் பிடிக்க அங்கங்கே ஆட்களை புகுத்தும் ஒரு கும்பல் படப்பிடிப்பு முடிந்தவுடன் சம்பத்தப்பட்ட நபரிடம் பெருந்தொகை கேட்டு மிரட்டுகிறது. பேரம் படியாவிட்டால் ஏதாவது தொலைக்காட்சி சேனலுக்கு அந்த படப்பிடிப்பு சிடியை விற்றுவிடுவதும் அதை வாங்கும் தொலைக்காட்சி சேனல் அந்தக் கண்றாவியை ஒளிபரப்பி தன் ரேட்டிங்கை எகிற வைப்பதும் தெரிந்ததுதான். சினிமாக்களுக்கெல்லாம் A, UA சர்டிபிகேட் தர ஒரு சென்சார் போர்டு இருப்பது போல தொலைகாட்சி சேனல்களுக்கு இல்லாதது சன் டிவி போன்றவர்களுக்கு ரொம்ப வசதியாகப் போய்விட்டது. இது மாதிரி ஏதாவது ஒளிபரப்ப கிடைத்தால் சன் டிவிக்கு குஷிதான். ராத்திரி 10மணிக்கு காமிக்கப் போறதுக்கு காத்தால 6மணியிலிருந்தே கத்த ஆரம்பிச்சுடுவான். “ பிரபல சாமியாரின் கிளுகிளுப்பூட்டும் படுக்கையறைக் காaaaaட்சிகள். பிரபல நடிகையும் சிக்கினார். இன்று இரவு 10மணிக்கு காணத்தவறாதீர்கள்” னு கூவுவான். இதுல நடுவுல சான்ஸ் கிடச்சா விளம்பரம் போடப்பாப்பான் கேடுகெட்ட ஹிந்துஸ்தான் லீவர். விளம்பர இடைவேளைக்குப் பிறகு சாமிகளின் லீலைகள் தொடரும்னு சொல்லுவான். ஒரு விஷயத்தில் சன் டிவி-யை பாராட்ட வேண்டும். குப்பை படத்தைக் கூட கத்தியே ஓட வச்சிடுவான். திருட்டு விசிடி எடுத்தவனுக்குக் கூட நஷ்டத்தை கொடுத்த முதல் படம் ஜக்குபாய். அந்த ஜக்குபாயைக் கூட “ இந்திய தொல்லைக்காட்சி வரலாற்றிலேயே திரைக்கு வந்து சில மணி நேரங்களே ஆன புத்தம்புது தமிழ்த் திரைப்படம் ஜக்க்க்க்கூகூகூகூபாஆஆய்”னு கத்தியே காசு பாத்துடுவான். தமிழ்நாட்டு மக்கள் 90சதவீதம் பேர் ஒரு நாளைக்கு ஒரு தடவையேனும் சன் டிவி-யை பாத்துடறான். அரசு கொடுத்த இலவச டிவியால் பெரும்பலன் சன் டிவிக்குதான். சன் டிவி உதவி இல்லாமல் இனி தமிழ்நாட்டில் ஒரு கட்சி ஆட்சிக்கு வருவது கஷ்டம்தான். அந்த அளவிற்கு மக்கள் அதோடு ஒன்றிப் போய்விட்டனர். நித்து ஒளிபரப்புக்குப் பின் அதோட ஷேர் விலை ரூபாய் ஏறிட்டதாய் புரோக்கர் சொன்னார். ஜக்குபாய் இணயதளத்தில் வெளியான பிறகு சரத்குமார் கருணாநிதியை சந்தித்து புலம்பியதாகவும் அதற்கு அவர் கவலைப்படாம படத்தை ரீலிஸ் பண்ணு. நான் வேணா படம் ஆரமிக்கரத்துக்கு முன்னாடி பத்து நிமிஷம் பேசறேன்னு சொன்னாராம். படத்தை விட அது இன்னும் கொடுமை. இவர் எழுதிய பெருச்சாளியின் ஓசைக்கு கிடைத்த லட்சக்கணக்கான பணத்தில் ஒரு பகுதியை ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு செலவழிக்கிறாராம். எந்த தயாரிப்பாளர் ஐந்து நாள் கூட ஓடாத ஒரு படத்தின் வசனகர்த்தாவுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கிறானோ? அப்படின்னா நடிகர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு எவ்வளவு கொடுத்திருப்பான்? எவ்வளவு நஷ்டப்பட்டிருப்பான்? காதுல பூ சுத்தரானுங்க. இந்த பணம்லாம் யாருதுன்னு நமக்கு தெரியாதா? இவர்கள் தப்பான வழியில் சம்பாதித்த பணத்தை படம் எடுத்து தானும் நஷ்டப்பட்டு மக்களையும் கஷ்டப்படுத்துகிறார்கள். சன் டிவிக்கோ கலைஞர் டிவிக்கோ தைரியம் இருந்ததால் ஒரு தீபாவளிக்கோ அல்லது பொங்கலுக்கோ அவங்க டிவில உளியின் ஓசையைப் போடச்சொல்லுங்க பாப்போம். ஒரு பய பாக்கமாட்டான். கையில் கிடைத்த படத்தையெல்லாம் தாறுமாறாக விமர்சனம் செய்யும் எழுத்துலக விபச்சாரி சாரு நிவேதிதா போன்றவர்கள் ஏன் உளியின் ஓசை போன்ற படங்களுக்கு விமர்சனம் எழுதுவதில்லை?

சாமியார்கள் சும்மா இருக்கும்போதே அர்ச்சனை செய்யும் கருணாநிதி நித்யானந்தா ஒளிபரப்பின் மூலம் சன் டிவி ஏதோ லஷ்மணன் கோட்டை தாண்டிவிட்டதைப் போல் நீலிக்கண்ணீர் வடிக்கிறார். ஒரு வேளை படம் கலைஞர் டிவிக்கு கிடைக்காமல் சன் டிவிக்கு கிடைத்துவிட்டதே என்ற கடுப்பாயிருக்கும்.

நித்யானந்தா சமாச்சாரத்திற்குப் பிறகாவது மக்கள் சாமியார்கள் பின்னால் செல்வதைக் குறைக்க வேண்டும். இந்த மாதிரி மார்க்கட்டு [read as market] போன நடிகைகளுடன் கெட்ட காரியங்கள் செய்வதை விட சாமியார்கள் பேசாமல் கல்யாணம் செய்து கொள்வது உத்தமம். இதில் சம்பத்தப்பட்ட நடிகை முன்னால் நடித்த படங்களில் கிடைத்த புகழை விட இந்தப் படத்தில் அதிகம் சம்பாதித்துவிட்டார். இது போன்ற ஈன காரியங்களைச் செய்வதை விட பேசாமல் இந்த சாமியார்கள் கல்யாணம் செய்து கொண்டு இறைப்பணியில் ஈடுபடலாம். வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஜீயர் ஸ்வாமிகள் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டு இறைப்பணியும் செய்கிறார்கள். அது போல் சைவ சம்பிரதயத்திலும் செய்ய வேண்டியதுதான். இல்லையென்றால் இது போன்ற போலி சாமியார்களால் சமயத்திற்கு இழுக்கு வந்துவிடும். நித்யானந்தாவிற்கு ரெண்டாயிரம் கோடி சொத்தாம். ஏண்டா இப்படி பணத்தை என்ன பண்றதுன்னு தெரியாம இப்படிப் பட்ட ஆட்கள்கிட்ட கொட்றிங்க. இதோ ஒரு நல்ல விஷயத்துக்காக தமிழ்ச்செல்வன் பணம் அனுப்ப சொல்லியிருக்கார். நண்பர் நாகநாதன் மூலமா எனக்கு தெரிய வந்தது. முடிஞ்சா இதுக்கு பணம் அனுப்பு. புண்ணியமாப் போவும்.

http://satamilselvan.blogspot.com/2009/10/blog-post.html


என்னைப் பொறுத்தவரையில் வாழ்க்கையில் காஞ்சி மஹாப்பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி சாமிகளைத் தவிர வேறு எவரையும் சாமியாராக ஏற்றுக்கொண்டதில்லை. உணவு பழக்க வழக்கம் உட்பட எல்லாவற்றிலும் ஒரு எளிமையைக் கடைபிடித்து வாழும் கடவுளாக இருந்தார். இனியாவது இந்த மாதிரியான போலி சாமியார்கள் பின்னால் போய் பணத்தை வீணடிக்காமல் நல்ல புத்தகங்களை வாங்கிப் படித்து உபயோகமாக நேரத்தை மக்கள் கடத்தலாம்.

“புவனா, வாழ்க்கையே வெறுத்துப் போச்சு.பேசாம சாமியாராப் பூடலாம்னு பாக்கறேன்” னு பொண்டாட்டிக் கிட்ட சொன்னேன்.

“ சும்மா அலையாதீங்க ” ன்னு அவ சொல்லிட்டா
.