Friday, February 7, 2014

`OFFICE` என்ற அசத்தல் தொலைக்காட்சி தொடர்



பொதுவாகவே தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பதில் எனக்கு என்றுமே பெருவிருப்பம் இருந்தது இல்லை. மாமியார்களையும், அழகு சுந்தரங்களையும் [அடியாட்கள்] பார்த்து வெறுப்பே மிஞ்சியது.மக்களின் ரசனையை நினைத்து வேதனைதான் பொங்கியது. ஆனால் சில நாட்களுக்கு முன்னர் தினம் புவனா இரவு பத்து மணிக்கு மேல் ஏதோ தொடர் பார்ப்பதும் தொடர்ந்து கலகலவென்று சிரிப்பதுமாக இருந்தது அறையில் புத்தகம் படித்துக் கொண்டிருந்த என் காதில் விழுந்த வண்ணம் இருந்தது. அப்படி என்ன அதில் இருக்கிறது என்று ஒரு நாள் பார்க்க உட்கார்ந்தேன். கலகலப்புக்கு பஞ்சமே இல்லை. இன்றைய அலுவலக சூழல் அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவின் வெடிச்சிரிப்பு,நொடிக்கு நூறு தரம் மச்சான் மச்சான் என்று அவர் சகாக்களை விளிப்பது,கார்த்திக்கின் காந்தக்குரல்,ராஜியின் அப்பாவித்தனம் எல்லாம் யதார்த்தமாக இருப்பது புத்துணர்ச்சியை பார்ப்பவர்களுக்கு தருவது நிதரிசனம். இவற்றுக்கெல்லாம் சிகரமாக தொடரில் இருக்கும் விஷயங்களாக எனக்கு படுபவை இரண்டு.








1. விஸ்வநாதனின் மேலாண்மை குணாதிசயங்கள். அவருடைய பதவிக்கேற்ற கம்பீரமான முடிவெடுக்கும் திறன், தன் கீழ் பணியாற்றுபவர்களை நன்கு தெரிந்து வைத்திருக்கும் திறன், அவர்கள் மீது அவர் வைத்துருக்கும் அசாத்திய நம்பிக்கை, ஒவ்வொருவரையும் அவர் எடை போடும் திறன், கம்பெனியின் முன்னேற்றத்தை பற்றி எந்நேரமும் சிந்திக்கும் தன்மை, பணியாளர்களை ஒருங்கிணைத்து அவர்களின் வேலைப் பாதுகாப்பிலும் உறுதி காட்டுவது போன்றவை அந்த பாத்திரத்தின் மேல் பெரிய அளவில் மரியாதையை உண்டு பண்ணுகின்றன. இவர் பாத்திரம் மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது என்பதை அவர் பெயரில் இப்போது விளம்பரங்கள் வெளியாவதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

2. லஷ்மி. இவர் முகத்தில் எப்போதும் ஒருவித புத்துணர்ச்சி. குரலோ கற்கண்டும் அதி மதுரமும் கலந்த ஒன்று. இளமைத் துள்ளல் நிரம்பிய இவர்தான் என்னைப் பொறுத்தவரை தொடரின் நாயகி. நிஜப்பெயர் மதுமிலா. இயல்பான அழகி.

மதனாக வருபவரும் அசத்துகிறார் அப்பாவியாக. அவர், அவர் காதலி மற்றும் அவர்களுடைய அலுவலகத்தோழி TRACK`ம் நன்றாகவே உள்ளன.

குறைகளும் உள்ளன. HR MANAGER விஸ்வநாதனிடம் பேசும்போதெல்லாம் உள்ளுக்குள்ளேயே தனியாக பேசுவது தொடர்வது மலின உத்தி. HARDWARE TEAM-ஆக வரும் குடி கும்பலின் பிதற்றல்கள் பெரும் பலவீனம். LAPTOP மற்றும் PROJECT விஷயங்களில் ராஜி மீண்டும் மீண்டும் அலட்சியமாக இருப்பதாக காட்டுவது இயல்பாக இல்லை.

எனக்குத் தெரிந்து 25 ஆண்டுகளுக்கு முன்னால் ஒளிபரப்பப்பட்ட `நுக்கட்` என்ற ஹிந்தி தொடருக்கு கிடைத்த அமோக வரவேற்புக்கு இணையான ஒன்றை `OFFICE` பெற்றுள்ளதாகவே எண்ணுகிறேன். மற்ற தொலைக்காட்சி சேனல்களுக்கு பெரும் எரிச்சலையும்,பயத்தையும் இந்த தொடர் கொடுத்திருப்பது கண்கூடு. ஒளிபரப்பப்படும் நேரம் [10-10.45] கூட யாரையும் முணுமுணுக்க வைப்பதில்லை. `OFFICE` தொடர் ஒரு `STRESS RELEIVER`ஆக பெரும்பாலானவர்களை மகிழ்ச்சியுடன் உறங்க அனுப்பி வைக்கிறது. பாலு மகேந்திராவின் கதை நேரத்திற்குப் பின் எந்த தொடரும் என்னை எழுதத் தூண்டியதில்லை. TEAM OFFICE-க்கு என் வாழ்த்துக்கள். MAY THIS TRIBE INCREASE.

No comments:

Post a Comment