Friday, February 7, 2014

6174- புத்தக விமரிசனம்

புத்தகம் : 6174

எழுதியவர் : கஸ்தூரி சுதாகர்

வெளியீடு : வம்சி பதிப்பகம்

விலை : Rs.3௦௦

6174 என்ற நாவல் குறித்து என் சகோதரர் ராஜேஷ் சிலாகித்து எழுதப்பட்ட மின்னஞ்சல் ஒன்றை அனுப்பிய அடுத்த நாள் வம்சிக்கு போன் செய்தேன். பவா.செல்லத்துரைதான் எடுத்தார்.` உங்கள் வங்கி கணக்கு எண் சொல்லுங்கள். பணம் அனுப்புகிறேன். 6174 ஒரு பிரதி அனுப்பிக் கொடுங்கள்` என்றேன். `பணம் இருக்கட்டும் முதலில் உங்கள் முகவரியைச் சொல்லுங்கள்.இன்றே அனுப்பி வைக்கிறேன்` என்றார். புத்தகமும் வந்தது. படிக்காமலே இரண்டு மாதம் வைத்திருந்தேன். உடல் நலம் தேற மருத்துவ விடுப்பில் ஓய்வு எடுக்கும்பொருட்டு சென்னை வந்திருந்த கைலாஷ் படிக்க ஏதாவது புத்தகம் வேண்டி கேட்க 6174-ஐ கொடுத்தேன். படித்துவிட்டு அருமை என்றான். பொங்கலுக்கு இலால்குடியில் போணி பண்ணிவிட வேண்டியதுதான் என நான் பையில் வைத்துக்கொண்டேன்.

நாவல் நன்கு விறுவிறுப்பாக எழுதப்பட்ட ஒன்று. தமிழில் ஒரு சீரிய முயற்சி. ஆசிரியர் சுதாகருக்கு பாராட்டுகள். Dan Brown-ன் பாதிப்பு நாவல் முழுவதும் விரவிக் கிடக்கிறது. சுஜாதா இருந்திருந்தால் சுதாகரைக் கொண்டாடியிருப்பார். அருமையான விமரிசனம் கொடுத்து `எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகம்` என அடையாளம் காட்டியிருப்பார். சுலபத்தில் புத்தகக் கண்காட்சியில் லட்சம் பிரதி விற்றிருக்கும். இதே ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தால் மில்லியன் கணக்கான விற்பனையை எதிர்கொண்டிருக்கும். எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் இதைப் படிக்க ஆலோசனை சொல்லலாம். கொஞ்சமும் ஆபாச கலப்பு இல்லை.

+கள்

அனகோண்டா பெயர்க்காரண விளக்கம் அற்புதம். நாவலின் அசாத்திய வேகம் வாசகனை பிரமிக்க வைக்கிறது. கோலத்தில் இவ்வளவு விஷயமா? எனக்கு கோலம்னாலே மைக்கேல்மதனகாமராஜனில் பாட்டி பேசும்` என் பேத்தி வாசல்ல கோலம் போட்டுண்டிருந்தா. இந்தப் படுபாவி அலங்கோலம் பண்ணிட்டான்`-ங்கிற கிரேசியின் வசனம்தான் ஞாபகத்துக்கு வரும். `சுடலை` போன்ற அடித்தட்டு மக்களின் பெயர்களை பாத்திரங்களுக்கு சூடியிருப்பது வரவேற்புக்குரியது. 6174 நம்பர் குறித்த விளக்கம் நிஜத்தில் புல்லரிக்க வைக்கிறது. வாசகன் கண்டிப்பாக பேனா எடுத்து சரி பார்ப்பான். `ஹெர்மோப்ரோடைட்` `லோனார் லேக்` போன்ற பிரயோகங்கள் கூகுள் பார்க்கத் தூண்டும். கதை தன் முழு வேகத்தை லோனாரில் எடுக்கிறது. ரவி பாத்திரம் ஆரம்பத்திலேயே இவர்களுக்கு சமதையாக Jeffrey Archer-ன் A Matter of Honour-ல் வருவதுபோல் அமைத்திருந்தால் இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்கும். கத்தி, இரத்தம்,வன்முறை குறைவு. பிரமிட் குறித்து நான் கேள்விப்பட்டதெல்லாம் அதற்குள் எதை வைத்தாலும் அதன் ஆரம்ப நிலையை அடையும் என்பதுதான். உதாரணத்துக்கு ஒரு பழைய சவரம் செய்த blade-ஐ பிரமிடுக்குள் வைத்தால் அது ஒரு நாளில் மீண்டும் சவரம் செய்யும் அளவுக்கு புதியதாக உருமாறிவிடும் என்பது போன்றவைதான். ஆனால் இந்த கதையில் பிரமிடுகள் பிரமிக்க வைக்கின்றன.

-கள்

விளிம்புநிலை வாசகர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு பத்தி பிரித்தல் படுமோசம். ஆரம்ப கட்டங்களில் அனந்துவும்,ஜானகியும் புதிர் முடிச்சுகளை அவிழ்க்கும் வேகம் MGR படங்களை நினைவூட்டுகிறது. காதுகொடுத்து பொறுமையாக விஷயங்களை கேட்காமல் எப்போதும் சலித்துக் கொண்டேயிருக்கும் மெத்த படித்த கதைமாந்தர்களை படைத்திருப்பது வாசகனுக்கு வெறுப்பையூட்டுகிறது. சாரங்கன் போன்ற பத்திரங்கள் பெரும் எதிர்பார்ப்பைக் கொடுத்து புஸ்-ஆகிவிடுகின்றன.. அடிக்கடி வெளியே போய் போன் பேசும் தேவராஜ் குறித்து சாதாரண என் போன்ற வாசகர்களுக்கே சந்தேகம் வரும்போது சடகோபன்&TEAM-க்கு சந்தேகம் வராதது நெருடலே.

400 பக்கங்களுக்கு மேற்பட்ட விஞ்ஞான புனைவு என்பது சாதரணமாக எல்லோருக்கும் கைகூடும் விஷயமல்ல. அதுவும் தமிழில். படிப்பு ஆர்வம் இப்போது குழந்தைகளிடத்து குறைந்து வருவதை இது போன்ற அறிவியல் புனைகதைகளை படிக்கத் தூண்டுவதன் மூலம் நிவர்த்திக்கலாம். இதன் வீச்சை பரவலாக்குவது நம் கையில்தான். தன் தின சம்பாத்தியத்தின் பெரும் பகுதியை டாஸ்மாக்கில் இழக்கும் தந்தைகளையே அதிக அளவில் கொண்டுள்ள நம் தற்போதைய சமூகம் இந்த புத்தகங்களையா தன் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும்?


No comments:

Post a Comment