Friday, February 7, 2014

ஐபிஎல் என்னும் மாயச்சக்கரம்


ஒவ்வொரு வருடமும் இப்போது ஏப்ரல் மே வந்தால் ஐபிஎல் என்னும் முரட்டு கிரிக்கெட் போட்டித் தொடர் அதீத விளம்பரத்துடன் பெரு நகரங்களில் காட்சிப்படுத்தப்படுகிறது. இது பெரும் பணம் பண்ணும் தந்திர விளையாட்டுத் தொடர்.இந்த தொடர் நடக்கும் இரு மாதங்களும் உலக அளவில் எந்த டெஸ்ட் தொடர்களோ அல்லது ஒரு நாள் போட்டிகளோ நடத்தப்படுவதில்லை.காரணம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கனமான கல்லாப்பெட்டி.கிரிக்கெட் நிர்வாகம் உலக அளவில் ICC கட்டுப்பாட்டில் உள்ளது என்று யாராவது சொன்னால் அது கட்டுக்கதை. BCCI சொல்வதுதான் சட்டம் என்பது DRS விஷயத்திலேயே வெளிப்படை.நாளைக்கு மூணு ஸ்டம்ப் வேணாம் ரெண்டு போதும்னு BCCI சொன்னா உடனே தலையாட்ட வேண்டிய கட்டாயம்.ஒரு காலத்தில் இந்த விளையாட்டில் வெள்ளையர்களின் ஆதிக்கம்[ஒரு காலத்தில் அவுஸ்த்ரேலியாவில் ஓவருக்கு எட்டு பந்து] இருந்தது போய் இப்போது இதை தன் சந்தைப் படுத்தும் திறனால் BCCI தன் வசமாக்கிக் கொண்டு ஆட்டிப் படைக்கிறது.

இங்கு திருவல்லிக்கேணியில் நம் இல்லத்துக்கு அருகில் வசிக்கும் முன்னாள் சர்வதேச நடுவர் [ முன்னாள் ஸ்டேட் வங்கி வூழியரும் கூட] நம் பெயர் கொண்ட முரளி அவர்கள் செவ்வாய் நான் மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்த போது இன்று கடைசி போட்டி சென்னையில் கண்டிப்பாக பாக்கறீங்க மனைவியுடன் என்று வற்புறுத்தி மூன்று டிக்கெட்டுகளைத் திணித்தார். இதற்கு முன் இவர் சென்னையில் நடந்த போட்டிகளுக்கு கொடுத்த டிக்கெட்டுகளை கீழே இருக்கும் சிறுவர்களுக்கும் அலுவலக நண்பர்களுக்கும் கொடுத்து என் பொன்னான நேரத்தை காத்தேன்.நான் போக வில்லை என்பதை அவரிடமே வெளிப்படையாக ஒப்புக் கொண்டேன்.புவனாவுக்கு இந்த கிரிக்கெட் சமாச்சாரத்தில் எல்லாம் அவ்வளவு ஈடுபாடு இல்லை. இன்னும் கல்லா மண்ணா, பாண்டி,ஐஸ் பாய்,குச்சி விளையாட்டு என்ற அளவிலேயே நிபுணத்துவம் கொண்டவர்.இரவு எட்டு மணிக்கு தொடங்கும் போட்டிக்கு நான் வீட்டுக்கு வந்து டிபன் முடித்து எட்டு மணி வாக்கில் வீட்டிலிருந்து கிளம்பி நடந்து சேப்பாக்கம் சென்று பரிசோதனைகள் முடிந்து உள்ளே செல்லும்போது கிட்டத்தட்ட ஐந்து ஓவர்கள் முடிந்து விட்டன. ஒரு பக்கம் CHEER GIRLS-களின் அலங்கோல ஆட்டம்.அதை வாய் பிளந்து பார்க்கும் கூட்டம்.இவர்கள் ஆடும் ஆட்டத்திற்கும் கிரிக்கெட் ஆட்டத்துக்கும் என்ன சம்பந்தம். அந்த காலம் முதல் இந்தியர்களுக்கு சினிமா என்றால் ஒரு கவர்ச்சி நடனம் கட்டாயம் இருந்தாக வேண்டும்.அது ஹிந்திப் படமானாலும் தமிழ்ப் படமானாலும் சரி.இந்தியர்களின் இந்த WEAKNESS-ஐ நன்றாக புரிந்து கொண்டு BCCI கோஷ்டி இதை அமுல் படுத்திவிட்டது.இவர்கள் வீட்டுப் பெண்களை இப்படி ஆட விடுவார்களா? அப்புறம் மைதானத்தில் காதைப் பிளக்கும் அளவுக்கு குத்துப் பாட்டுக்கள் ஒலிபரப்பப் பட்டு அதற்கு ஆபாச நடனம் ஆடும் ரசிகர் கூட்டம் பெண்கள் உட்பட. தலையில் முள்ளம்பன்றி போல கலர் கலராக மலிங்கா பாணியில் ஒரு கூட்டம்.கன்னத்தில் தங்கள் அபிமான அணியின் லோகோவை பெயிண்ட்டில் வரைந்து அலையும் கூட்டம் ஒன்று.இதை சுரண்டி எடுக்க இரண்டு நாளாகும்.எனக்கு பக்கத்தில் தன கணவர் மகனுடன் வந்திருந்த ஒரு 45 வயது பெண்மணி வாய்க்குள் இரு விரலை விட்டு விசிலடித்த காட்சி என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.திடீரென ஒரு பெண் போட்ட ஆபாச குத்தாட்டம் கிரிக்கெட்டிலிருந்து கவனத்தை திருப்பியது. அப்போது சேவாக் அவுட்டாகி திரும்ப அவர் எப்படி அவுட்டானார் என என் பக்கத்திலிருந்த அலுவலக ஊழியரைக் கேட்க அவர் தெரியாதென சொல்ல இந்த பக்கம் இருந்த இன்னொருவரைக் கேட்க அவர் நான் பாக்கலீங்க என அசடு வழிந்தார்.இதிலே ஏற்பாட்டாளர்கள் மைக்கில் தோனிக்கு ஒரு விசில் போடுங்க குசு போடுங்கன்னு ஒரே அலப்பரை.மைதானத்தில் வளம் வரும் உணவுப் பொருட்களின் விலையோ பயங்கரம்.ஒரு கப் பெப்சி 40ரூபாய் சப்பாத்தி 60ரூபாய் பிஸ்ஸா 350ரூபாய்.வெளியிலிருந்து உணவுப் பொருட்கள் கொண்டு வர அனுமதி இல்லை.தமிழகத்தில் நிலவும் கடும் மின் பற்றாக்குறையிலும் பன்மடங்கு மின்சாரத்தை குடிக்கும் மைதானத்தின் ராட்சச இரவு விளக்குகள் உறுத்தின.இவர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு நூறு ரூபாய் போடலாம்.மூன்று மணி நேரத்தை வீணடித்த கவலையோடு கசகசவென வீடு திரும்பினேன்.இவ்வளவு சொல்றே ஏன் போனே என கேட்பவர்களுக்கு என் காலத்து நாயகன் கபில் தேவ் சொன்னதை சொல்கிறேன்`We will have to learn the ways of a brothel`.போட்டி டிக்கெட்டுகளின் ஆரம்ப விலை 750.உச்ச விலை 6000க்கும் மேலே.டிக்கெட்டுகள் அனைத்து விற்பனையாவதில்லை.முன் நாட்களில் டிக்கெட் எடுப்பவர்கள் முட்டாள்கள்.போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னால் மஞ்சள் சட்டை அணிந்த வாலிபர்கள் டிக்கெட்டுகளை கையில் அடுக்கிக்கொண்டு எவ்வளவு வச்சிருக்கே?எறநூரா இந்தா.அண்ணே நூறு ரூபாதான் இருக்கு.கொண்டா போ உள்ளே.இப்படி இதன் மூலம் கருப்பு வெள்ளையாகுதோ?ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

இதற்கு நடுவில் இன்று வெளியான match fixing விவகாரம் ஐபிஎல்-ன் விகார முகத்தை காண்பித்துவிட்டது.இது குறித்து நான் முன்னர் சொன்னபோது கைலாஷ் போன்றவர்கள் நம்பவில்லை.இப்போது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.ஐபிஎல்-ஆல் சில நன்மைகள்தான்.அதிகம் அறியப்படாத ஆட்டக்காரர்கள் வெளிச்சத்துக்கு வருவது.உதாரணம் பின்னி,விஸ்வநாத்.டிராவிட் போன்றவர்களின் இன்னும் தொடரும் form.தீமைகளோ பல.டெஸ்ட் கிரிக்கெட்டை அடியோடு அழிக்க வல்ல ௨௦-௨௦ ஆட்ட போட்டிகள்.இரு மாதங்கள் சிறுவர்களின் அறிவுத் தேடலை அழிக்க வல்ல கிட்டத்தட்ட அறுபது போட்டிகள் கொண்ட தொடர்.

IPL என்னும் மாயப் பேயைக் கொன்று போட வேண்டும்,
இல்லை என்ற போது எந்தன் மூச்சு நின்று போக வேண்டும். ஐபிஎல் போட்டிகளுக்கு அதீத முக்கியத்துவம் கொடுப்பதை பத்திரிகைகள் நிறுத்த வேண்டும்.நவ்ஜோத் சித்து போன்ற கூச்சல் போடும் கோமாளிகளை சேனல்கள் புறக்கணிக்க வேண்டும்.


No comments:

Post a Comment