Thursday, February 13, 2014

அஞ்சலி- பாலு மகேந்திரா- ஒ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா


தமிழ் திரையுலகம் ஒரு மிகப் பெரும் ஆளுமையை இழந்து விட்டது. எனது ஆதர்ச இயக்குனர்களில் ஒருவர். சினிமாவையே சுவாசித்து வாழ்ந்தவர். அவர் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட வைர வாரிசுகள் பலர். `அழியாத கோலங்கள்` மூலம் தமிழில் இயக்குனர் அவதாரம் எடுத்து தமிழனுக்கு சினிமாவின் புதிய பரிமாணங்களை காட்டியவர். சின்ன சின்ன விஷயங்களில்கூட அவருடைய touch இருக்கும்.

ஏறக்குறைய சினிமா உலகிலிருந்து ஓய்வு பெற்று விட்டார் என என் போன்றோர் எண்ணிக்கொண்டிருந்தபோது `தலைமுறைகள்` மூலம் நடிகனாகவும் அவதரித்து பரவசப்படுத்தினார்.

பாலுவுக்கும்,இசைஞானி இளையராஜாவுக்கும் இடையே மற்றவர்களுக்கு பெரும் பொறாமையூட்டும் ஒரு அதீத நட்பு அலைவரிசை ஓடிக்கொண்டிருந்தது இன்று காலை வரையில். பாலுவின் படங்களுக்கு மட்டும் அதி உன்னத பாடல்களையே இளையராஜா எப்போதும் தரும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். மிகப் பெரிய வெற்றிக் கூட்டணி. உதாரணத்திற்கு சில பாடல்கள்-

மூன்றாம் பிறை - கண்ணே கலைமானே

நீங்கள் கேட்டவை - ஒ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா

மறுபடியும் - நலம் வாழ எந்நாளும் நல்வாழ்த்துக்கள்

மறுபடியும் - எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு

மூடுபனி - என் இனிய பொன் நிலாவே


இரட்டை வால் குருவி- ராஜ ராஜ சோழன் நான் 

அழியாத கோலங்களில் வரும் `நான் என்னும் பொழுது ஏதோ சுகம் ஏதோ தினம்` பாடலை கேட்கும் போதெல்லாம் நான் அப்படியே சமைந்து போய்விடுவேன். மொழி கடந்த பெரும் இசை மேதை சலீல் சௌத்ரி பாலுவுக்கேன்றே தொடுத்த அற்புதமான பாடல். மகேந்திரன் இயக்கிய`முள்ளும் மலரும் `படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பாலுவின் மேதமை இளையராஜாவின்` செந்தாழம்பூவில் வந்தாடும்`பாடலில் வெளிப்படும். அந்த பாடலில் ஷோபா வெளிப்படுத்தும் முக பாவங்கள் நிச்சயம் பாலுவின் கைவண்ணம்தான் என்பதை அடித்து சொல்லுவேன். ஜானிக்கும் அவர்தான் ஒளிப்பதிவு. மழையில் ஸ்ரீதேவி பாடுவது போன்ற ஜானகியின் குரலில் வந்த `காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுது` பாடல் காலத்தைத் தாண்டி இன்றும் முன் நிற்கிறது.

இவரது வீடு படம் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையை அருமையாக பதிவு செய்திருந்தது. பாலு மகேந்திராவின் `கதை நேரம்` தொலைக்காட்சி தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்ற இயல்பான ஒன்று.

தமிழ் சினிமா ரசிகனை வேறு ஒரு தளத்திற்கு இட்டுச் சென்றதில் பாலு மகேந்திராவின் பங்கு முதன்மையானது. அவரது ஆத்மா சாந்தியடைய தலைமை ரசிகனின் பிரார்த்தனைகள்.

பன்னீரைத் தூவும் மழை.. சில்லென்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இந்நேரமே..
என் நெஞ்சில் என்னென்னவோ வண்ணங்களாடும் நிலை
என்னாசை உன்னோரமே..
வெண்ணீல வானில்.. அதில் என்னென்ன மேகம்
ஊர்கோலம் போகும்.. அதில் உள்ளாடும் தாகம்
புரியாதோ என் எண்ணமே.. அன்பே..

No comments:

Post a Comment