Tuesday, February 11, 2014

பண்ணையாரும் பத்மினியும்- திரை விமரிசனம்



இரண்டு நாள் வங்கி வேலை நிறுத்தம். ஆனால் நீண்ட நேரம் வெய்யிலில் நீங்கள் சில நாட்கள் நிற்கக் கூடாது என Dr. கண்டிப்பான உத்தரவு போட்டிருந்ததால் காலையில் நடந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள போகவில்லை. முன்னெல்லாம் வேலை நிறுத்தம் என்றால் ஊதியம் அடிபடும் என சிலர் முணுமுணுப்பர். ஆனால் இப்போதெல்லாம் இதைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை. இந்த ஓய்வை விரும்பி வரவேற்கின்றனர். அந்த அளவுக்கு work pressure. நான் இந்த இரண்டு நாட்களும் புவனாவை வெளியே கூட்டி சென்று திருப்தி படுத்த முடிவெடுத்தேன்.

திங்களன்று காலை tiffin மோனிஷா-விலிருந்து பார்சல். மதியம் சாப்பட்டிற்குப்பின் city center Inox-ல் பண்ணையாரும் பத்மினியும். Inox-ஐ தமிழில் ஐநாக்ச் என்று எழுதியிருப்பது எரிச்சலை உண்டு பண்ணியது. புவனா பையில் சாமார்த்தியமாக வீட்டிலிருந்து கைமுறுக்கை கடத்தி தியேட்டருக்குள் கொண்டு வந்தது திருப்தியளித்தது. மாலை அங்கேயே window shopping. அப்புறம் அப்படியே கிளம்பி மயிலை காரணீஸ்வரர் கோவில், மயிலை ஷீரடி சாய்பாபா கோவில், கபாலீஸ்வரர் கோவில். சாய்பாபா கோவிலில் சுடசுட வெண்பொங்கல் மற்றும் கபாலீஸ்வரர் கோவிலில் சக்கரைப்பொங்கல் புளியோதரை என்று சிக்கனமாகவே கதையை முடித்தேன்.

மதியம் சாப்பாட்டுக்குப் பின் தூக்கம் கண்ணை சுழட்டியது. தியேட்டரில் சுமார் 50 பேர். [50*120-Rs.6000]. படம் ஆரம்பிக்குமுன் advt. அந்த காலத்தில் ஒரே படம் இரண்டு தியேட்டரில் வந்தால் அந்த தியேட்டரிலிருந்து படச்சுருள் வரவரத்தான் படம் போடப்படும். அதுமாதிரி வரவேண்டியுள்ளதோ என எனக்கு சந்தேகம். நிறைய போட்டு படுத்தி எடுத்து விட்டார்கள். சரி படத்திற்கு வருகிறேன்.

ஒரு சிறுகதையை எப்படி ஒரு திரைப்படமாக மாற்றுவது என்பதை இந்த படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். பத்மினி வரும் முதல் காட்சி ஒரு ஹீரோ enter ஆவதுபோல் காட்டியிருப்பது அட்டகாசம். பண்ணையார் எந்த பந்தாவும் இல்லாமல் ஊர் மக்களை தன் குடும்பத்தை போலவே நடத்துவது மனதுக்கு இதம் தருகிறது. ஊர் பசங்களிடம் நான் வந்ததும் எல்லாரும் ஏறிக்கலாம்னு அன்பாக சொல்வதும் இதம்தான். எழவு வீட்டிற்கு கார் அனுப்புவதோடு இல்லாது அதில் body-ஐயும் ஏற்றிச் செல்ல அனுமதிப்பது ஒரு புதிய அனுபவம். குளிச்சிருந்தான்னா இவனையும் கூட்டி போகலாம் என பண்ணையார் பீடையைப் பார்த்து சொல்லும்போது தியேட்டரில் குபீர்.

படத்தின் கதாநாயகி என்றால் பண்ணையாரின் மனைவியைத்தான் சொல்லவேண்டும். அவர் கண் மொழி அற்புதம். கணவர் மேல் அவர் வைத்திருக்கும் காதல் கண்ணில் வழிகிறது. தம்பதிகளுக்குள் இருக்கும் நெருக்கம் நெகிழ வைக்கிறது.பண்ணையார் மனைவி வாழ்ந்திருக்கிறார் படத்தில். வண்டியை ஓட்ட கத்து கொடுத்தால் வேலையை விட்டு எடுத்து விடுவார்களோ என்ற அச்சத்தில் விஜய் சேதுபதி முழுதும் கற்றுக் கொடுக்காமல் டபாய்ப்ப்தும், அடிக்கடி பண்ணையார் ஒண்ணு ஆக்சலரேட்டர், இரண்டு ப்ரேக் அந்த மூணாவது என்னப்பா என்று கேட்டு கிளட்ச் என்று தெரிந்து கொள்வதும் நல்ல சிரிப்பு. கார் மீது பண்ணையாருக்கு அதீத காதல் என்றால் அவர் மனைவிக்கும், விஜய் சேதுபதிக்கும் அதே அளவு கார் மீது பாசம்.

காவி கோடுகள் போட்ட பழைய ஒட்டு வீடு, மாட்டு வண்டி, வாசலில் வாழை மரம், வைக்கப்போர் என அசல் கிராமத்து வீடு கண்முன். Premier padmini காலத்து அண்ணாமலை சினிமா போஸ்டர் என எல்லாம் கச்சிதம். சேதுபதி இறந்தவர் வீட்டில் பெண்ணை அப்படி காதலாக நிறைய நேரம் பார்ப்பது அருவருப்பையே தருகிறது. அவர் காதலியாக வரும் பகுடர் போடாத பெண் கண்ணாலேயே கதைகள் பல சொல்கிறார். படத்தின் பலம் பீடை. அவர் முன்னாடி உட்கார ஐந்து ரூபாய் கேட்பதும் அதை சேகரித்து பையன் வரும் போது கார் வேறு இடத்துக்கு போய்விடுவதும் பின் சில வருடம் கழித்து பெரியவனான பிறகு சொந்த காரில் ஊருக்கு வந்து பழைய ஞாபகங்களில் திளைத்திருக்கும்போது சேதுபதி TCX 1104-ல் வந்து `உங்க காரா? இல்லன்னா நான் டவுனுக்குத்தான் போறேன் .வாங்க எனகூப்பிடுவதும் நான் முன்னாடி சீட்டுல உக்காந்துக்கவா என கேட்டு பயணிப்பதும் நெகிழ்ச்சி.

படத்தில் மற்றபடி பெரிதாக சொல்ல எதுவுமில்லை. குறைகளுமில்லை. கொஞ்சம் ஜவ்வு போல இழுத்திருக்கிறார்கள்.கொட்டாவி வரவில்லை.

No comments:

Post a Comment