Friday, February 7, 2014

ஆடிய ஆட்டமென்ன ..............

பொங்கலுக்கு ஊருக்கு கிளம்பும்வரை கடுமைமையான வேலைப்பளு. அதற்கு இரண்டு நாள் முன்னதாகத்தான் கைலாஷ் chicken-pox-ஆல் பாதிக்கப்பட்டு சென்னையில் ஒரு பத்து நாள் ஓய்விற்கு பின் கோவை கிளம்பி கல்லூரி சென்று அப்படியே பொங்கலுக்கு இலால்குடி வருவதாக திட்டம். முதலில் சமயபுரம் மட்டும் சென்று வருவதாய் இருந்த திட்டத்தை மாற்றி மேலும் இரண்டு நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு அப்படியே ஒரு வருடத்திற்கு மேல் போகாமல் விடுபட்டுப்போன குலதெய்வம் வைதீஸ்வரன்கோ விலுக்கும் போக முடிவெடுத்து எல்லாவற்றையும் மாற்றியமைத்தேன். திட்டமிட்டபடியே எல்லா நடக்க வைத்தீஸ்வரன்கோவில் போய் திரும்பி இலால்குடி நெருங்கையில் நெற்றிப்பொட்டில் ஊசி குத்துவது போன்ற ஒரு உணர்வு. வீட்டுக்கு வந்து முகம் கழுவியபின் முகத்தை கண்ணாடியில் பார்க்கையில் நெற்றி முழுவதும் சிறுசிறு வேர்க்குரு போன்று இருந்தன. முதுகும் சற்று அரிக்க புவனாவும் கைலாஷும் அம்மை என்று உறுதி செய்தனர். மேனேஜர் முதலிலேயே சொன்னபடி தடுப்பு ஊசி போடாத தவறை உணர்ந்தேன். சரி மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க என்ன செய்யலாம் என உடன் யோசித்தேன்.சென்னை போய்விடலாமா? முடியுமா?விடுவார்களா? ஒரு வழியாக மாடி அறையில் quarantine-ல் இருக்க முடிவெடுத்தேன்.

அடுத்த நாள் காலை மேனேஜர்-க்கு தொலைபேசிவிட்டு கைலாஷ் ஆலோசனைப் படி Dr.சத்தியநாதனை சந்தித்து தீவிரத்தை குறைக்க முடிவெடுத்தேன். அவரும் Chicken-pox என உறுதி செய்து சில மாத்திரைகளை பரிந்துரைத்தார். புவனாவிற்கு வராமல் இப்போது தடுப்பூசி போட்டால் பலனிருக்காது என்பதையும் தெரிவித்தார். கைலாஷுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாததால் நமக்கும் இருக்காது என்று நினைத்ததற்கு மாறாக அம்மையின் தீவிரம் அதிகமாகி அடுத்த நாள் மெல்ல மெல்ல வேறு ஒரு உலகத்திற்குள் slip-ஆகி சென்றேன்.பசி தூக்கம் மறந்தேன் அடியோடு. கடும் உடல் வலி. தலை முதல் கால் முட்டி வரை மகமாயியின் தீவிர விளையாடல்.பிழைப்பதே கடினமோ என்ற எண்ணம் வேறு என்னுள். இந்த நேரங்களில் புவனாவின் மன உறுதியும்,கவனிப்பும்தான் என்னை சற்றே ஆசுவாசப்படுத்தும்.

நான்காம் நாள் நல்ல இரவுத் தூக்கதிற்குபின் விழித்த எனக்கு ஒரு புத்துணர்வு பாய்ந்தது போன்ற உற்சாகம். சற்று நேரத்தில் அகோரப் பசி. ஒரு சில இட்லிகளை விழுங்கியபின் மதியம் நல்ல பசியில் ரசம் மற்றும் மோர்சாதம். உள் அளவில் பழைய உற்சாகம் மீண்டும்.வெளித்தோற்றமோ மற்றவர்களை பயங்கொள்ளச்செய்யும் நிலை.

புதனன்று முதல் தண்ணீர் என்று அம்மாவும் புவனாவும் முடிவு செய்து காலையில் ஒரு பெரிய பாத்திரத்தில் வேப்பிலைகொத்துகளை போட்டு இயற்கையாக நீரை சூடுபடுத்தும் பணியில் இறங்கினர். மதியம் ஒருமணி வாக்கில் ஒரு பாத்திரத்தில் பாதம் பாயாசத்தை ஒத்த திரவத்தையும் [ பருத்திப் பால்-தழும்புகளை உடன் மறையச் செய்ய ] மற்றொரு கிண்ணத்தில் பச்சையாக நல்ல வாசனையோடு சரவண பவன் சட்னியை நினைவு படுத்தும் கலவையையும் ஒப்படைத்து நன்றாக உடலில் தடவி சற்றே ஊறியபின் குளிக்க சொன்னார்கள்.அப்படியே துணியில் வார்த்த இட்லி ரெண்டு கொடுத்தா உள்ளே உடறேன்னு சொன்னேன். எப்பவுமே எனக்கு துணியில் வார்த்த இட்லிதான் பிடிக்கும்.அதன் clone-ஆன வழவழ-ன்னு இருக்கும் குக்கர் இட்லியை கண்டால் எனக்கு ஆகவே ஆகாது. பின்னர் கைபேசியில் நண்பர் சேகருடன் பேசும்போது `இப்போது நான் படுத்திருப்பது.நீ காலில் அடிபட்டு படுத்தது இதெல்லாம் நமக்கு ஒருவகை forced ரெஸ்ட்-தான்.இல்லாவிட்டால் நாம ஓடிக்கிட்டேதான் இருப்போம்`னு சொன்னேன்.

என்ன புத்தகக் கண்காட்சிக்கு போக போட்ட திட்டமெல்லாம் தவிடுபொடி. நல்ல வேளை.கடைசி நாள் சென்ற நண்பருக்கு கைபேசி வாங்க உத்தேசித்த புத்தகப் பட்டியலை சொல்ல அவர் அப்படியே வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்.

வெள்ளை யானை- ஜெயமோகன்
அஜ்னபி - மீரான் மைதீன்
தூப்புக்காரி- மலர்வதி
வெலிங்டன் - சுகுமாரன்
பூக்குழி- பெருமாள் முருகன்
மரப்பல்லி- வா.மு.கோமு
ஜின்னாவின் டயரி - கீரனூர் ஜாகிர்ராஜா

இந்த முறை புத்தகக் கண்காட்சியின் சிறப்பம்சம் காலச்சுவடால் வெளியிடப்பட்ட மருதுவின் கைவண்ணத்திலான பெண் ஆளுமைகளின் காலண்டர்.

இப்படியே மேலும் ஐந்து நாள் ஓய்விற்குப்பின் திங்கள் சென்னை திரும்பினோம்.30 அன்று முதல் வங்கிக்கு செல்ல முடிவு.

No comments:

Post a Comment