Friday, February 7, 2014

தலைமுறைகள் -சினிமா விமரிசனம்

நீண்ட நாள் கழித்து வாத்தியார் பாலு மகேந்திராவின் படம் வெளியாவது எனக்குள் ஒரு புத்துணர்வைத் தந்து சத்யத்திற்கு ஓடி முன் பதிவு செய்ய வைத்தது. பாலு மகேந்திரா அவர்கள் இளையராஜா மீது வைத்திருக்கும் அதீத மரியாதை கலந்த நட்பு எனக்கு மிகவும் பிடிக்கும். பாலு படம் என்றால் இசைஞானி ஒருவித தனி ஈடுபாட்டோடு இசை கூட்டுவது நீண்டு தொடரும் ஒரு கதை. கடைசிவரை அரங்கம் செல்லும் வரை என்ன படம் என்பதை புவனாவிடம் சொல்லவில்லை. `பிரியாணி`யாங்க`தகறாராங்க என்று `தலைமுறைகள்` தவிர்த்து பிறவற்றை கேட்டவரிடம் ஒரு தெலுங்கு படம் போறோம் என்று சொன்னவுடன் `முதல்லேயே சொல்லிருந்தா கிளம்பியிருக்க மாட்டேன்` னு சொல்லிட்டு எதுக்கும் மரோசரித்ரா ரேஞ்சுக்கு இருக்குமோ-ன்னு சபலத்தோடு கிளம்பினார்.

இரண்டாவது நாள் என்ற போதிலும் அரங்கு நிறையவில்லை. ஒரு நல்ல கலைஞனுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் வழக்கமாக கொடுக்கும் மரியாதை சற்றும் கூடவில்லை.

திரைப்படத்தில் பங்களிப்பு அளித்தவர்களின் பெயர்கள் வித்தியாசமான எழுத்துருவில் வடிவைக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் சுகாவுக்கு நன்றி என போடப்பட்டதும் தமிழ்த் திரையுலகம் மதிக்க மறந்த பாலு அவர்களின் தலையாய சீடன் சுகாவை சந்தித்தது நினைவுக்கு வந்தது. அவருடைய `படித்துறை` படம் எடுக்கப்பட்டு முடங்கிக்கிடப்பது குறித்து இரு ஆண்டுகளுக்கு முன் கேட்டேன். தயாரிப்பாளருக்கும் ஒரு முட்டாள் பைனான்சியருக்கும் இடையிலான பணப்பரிவர்த்தனை விவகாரத்தால் தன் படம் முடங்கிக் கிடப்பதை வருத்ததோடு சொன்னார். Title போடும் போது இசைஞானி இளையராஜா பெயர் போடப்பட்டபோது கைதட்டல். படம் ஆரம்பித்த உடனே இளையராஜாவும் பினனணியில் பங்களிப்பை ஆரம்பித்துவிடுகிறார். சில ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சியில் தொடராக வந்த கதை நேரத்தில் வந்த நடிகர்கள் சிலர் வருவது அந்த தொடரின் மற்றொரு Episode-ஆகவே நினைக்க வைக்கிறது.மகன் கிருஸ்தவ மதப்பெண்ணை மணமுடித்ததால் `பொணத்துக்கு கூட வரக்கூடாது` எனக் கடுமை காட்டும் பாலு. அந்த பழைய வீட்டின் சன்னல் பக்கத்தில் அவர் உறங்கும் காட்சியின் lighting அற்புதம். நீண்ட நாட்கள் கழித்து வரம் மகனை உள்ளே அனும்திப்பாரோ என நாம் பதறும்போது `டேய்.shoe-வை கழட்டுடா` எனும்போது கல்லுக்குள் ஈரம். குழந்தைகளின் பெயர்களுடன் `பிள்ளை`சேர்க்க சொல்லி தாத்தா சொல்லியிருப்பது தமிழ் சமுதாயத்தில் வேரூன்றிக்கிடக்கும் சாதி பிடிமானத்தை படம் போட்டு காட்டுகிறது. `வாடா லஷ்மணா` என்று நண்பனை அழைக்கும் குரல் இன்னும் காதில். தமிழ் தெரியாத பேரனும் ஆங்கிலம் தெரியாத தாத்தாவும் சந்திக்கும் முதல் காட்சியில் பேரனின் அப்பா பெயரை கேட்டு தன் ரத்தம் என்றதும் காட்டும் பாசம். பேரனை கூட்டிக்கொண்டு அவர் வெளியே போகும்போது கிராமத்தின் அழகியலைக் காட்ட நம்மையும் அழைத்து செல்கிறார் பாலு. குறிப்பாக பேரன் காலையில் `Where are you going?` எனக்கேட்டதும் `ஆத்துக்கு`என்று அவர் கூற `ஆத்துக்கு means`என்றதும் `உன் அம்மாவைகேள்` எனச் சொல்ல பையன் அம்மாவிடம் `அம்மா ஆத்துக்கு means`எனக்கேட்டதும் அவர் `river`இரு சொல்ல பையன் `river means`என்று கேட்கும்போது நாம் நம் நதிகளை நாட்டில் பராமரிக்கும் அவல நிலையை குத்திக்காட்டுகிறார் பாலு. நதிக்கரைக்கு பாலு பேரனை அழைத்து செல்லும் காட்சி அற்புதம். இது போன்ற ஆற்றை அழகாக படம் பிடித்தவர் யாரும் இலர். அது எத்தனை மணிக்கு எடுக்கப்பட்டிருக்கும் என்ற எண்ணமே என் மனதில் ஓங்கி இருந்தது. ஆற்றங்கரை அருகில் காட்டில் தாத்தாவும் பேரனும் நடக்கும் காட்சியில் இளையராஜா பின்னணியில் ஒலிக்க வைக்கும் பறைவகளின் ஒலிகள் காதுக்கு விருந்து.மனதிலே சிலிர்ப்பு.மேதமையின் வெளிப்பாடு.[ மழைக் குருவியின்மெதுவாக ஆரம்பித்து கொஞ்சம்கொஞ்சமாக அதிகரிக்கும் அற்புத ஒலி, அக்கக்கா குருவியின் ஓசை ஒலி] `தியோடர் பாஸ்கரனின்` கட்டுரையை படமாக்கியது போன்ற ஒரு அற்புத நிலை. ஒரு இடத்தில் விடியலை பாலு படமாகியிருக்கும் விதம் அட்டகாசம். நீண்ட நாள் கழித்து பயந்து கொண்டே வரும் மகனின் நண்பனைப் பார்த்து`எங்கடா ஆளயே காணோம்.திருட்டு கல்யாணத்துக்கு கையெழுத்து போட்ட பய இல்ல நீ`எனும் போது குபீர் என்ற சிரிப்பலை அரங்கில். பேரனும் தாத்தாவும் ஆளுக்கொரு மரத்தடியில் ஒதுங்கும்போது பேரன் `Grandpa, that tree is burning`எனும் போது `பின்னாடி நம்ம லஷ்மனந்தான்.அவனுக்கு சுருட்டு புடிச்சாதான் வரும்`எனும்போதும் சிரிப்பு. பேரனுக்கு தாத்தா திருக்குறள் சொல்லித்தருவதும் தாத்தாவுக்கு பேரன் jack அண்ட் jill சொல்லித் தருவதும் அருமையான location-ல் படமாக்கப்பட்டுள்ளது.

மாமனாருக்கும் மருமகளுக்கும் இடையே கொஞ்சம் கொஞ்சமாக வளரும் அன்னியோன்யம் கவித்துவமாக படமாக்கப்பட்டுள்ளது.அரங்கை விட்டு வெளியே வந்தும் அகலாதவை பாலுவின் சற்றே விந்தி நடக்கும் காட்சியும் ஜன்னல் அருகே சாய்வு நாற்காலியில் அவர் குறுந்தூக்கங்கள் போடும் காட்சியும்தான். இது போல குறைந்த budget-ல் நிறைவாக எடுக்கப்படும் படங்களுக்கு அதிக வரவேற்பை கொடுக்க தமிழர்கள் முன் வரவேண்டும்.

No comments:

Post a Comment