Friday, February 7, 2014

திரை விமரிசனம்-- இது நம்ம கிராமம்

சத்யத்தில்தான். ஆனால் இந்த முறை தனியாக.எல்லோரும் சேர்ந்து போவதற்குள் படம் போய்விடும் என்ற பயத்தின் காரணமாக.படம் வந்த இரண்டாம் நாள் கொட்டகை வெறிச்.வெளியே பிராமணாள் மட்டும் என்று போட்டிருக்கிறதோ என்று ஒரு சந்தேகம்.படம் ஆரம்பிக்கு முன் பக்கத்து சீட் மாமா மாமியிடம்`கோலங்கள்ல தேவயானி மாமனாரா வருவானே அவன் எடுத்த படம்`னு விளக்கம்.

1938-45 காலகட்டத்தின் அக்ராஹர சூழ்நிலை படமாக்கப்பட்டுள்ளது.கேரளம் மற்றும் நாகர்கோயில் பகுதிகளில் அக்ரஹாரத்தைத்தான் கிராமம் என குறிப்பிடுவர். ராவ்பகதூர் சுப்பிரமணிய சர்மாவின் மகனின் பூணல் கல்யாணத்தில் படம் ஆரம்பிக்கிறது.வீட்டில் ஆச்சாரமாகவும் குடும்பத்தினரிடம் கறாராகவும் இருக்கும் மணி சாமி சின்ன வீட்டுக்கு போகும்போது சுபாவம் மாறி விடுகிறார். ஆண் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் பெண்கள் என்று வரும்போது கடுமையான கட்டுப்பாடுகள்.அதுவும் விதவைப் பெண்களுக்கு குறிப்பாக.படத்தில் பாட்டியாக வரும் சுகுமாரியின் நடிப்பு அற்புதம்.குறிப்பாக நாவிதர் அவர் தலையை மழிக்கும் காட்சியில் அவர் காட்டும் முக பாவனைகள் பிரமாதம்.நாவிதர் மாஸ்டராக வரும் நெடுமுடி வேணுவிடம் `இது வில்சன் துரை கொடுத்த கத்தியாக்கும்`என்பதும் அதே வசனத்தை பாட்டியிடமும் சொல்வதும் நல்ல நகைச்சுவை. சற்றே மனநிலை பிறழ்ந்தவராக வருபவர் [பெயர் முடிவில் ஏதோ கலாமண்டலம்-னு வருகிறது]`மாஸ்டெர் அக்குளை செரச்ச கத்திதான் பாட்டி தலையையும் சிரைக்குதுது`னு அங்கதமாக சொல்கிறார்.பாத்திமா பாபு மற்றும் அவரது அக்காவாக வரும் Concubine பாத்திரம் நாராயணி,நெடுமுடி வேணு இவர்களது வீட்டு நடைமுறைகள் முரணாக [listless] அரைவேக்காட்டுத்தனமாக படைக்கப்பட்டுள்ளன. Y.G.மகேந்ரா நளினி பாத்திரங்கள் படத்தின் பெரும் பலவீனம். வீட்டின் புழக்கடை அட்டகாசம். கல்யாணத்திற்காக பத்து வயது பெண் அதிகாலையில் எழுப்பப்படுவதும் அது இன்னும் தூக்கம் வருதும்மா என்று அழுவதும் ஊஞ்சலில் தூங்கித் தூங்கி வழிவதும் வெகு இயல்பு.அந்த காலத்தில் மிகப்பெரிய பணக்காரர்கள் கூட எளிமையாக கொஞ்ச நபர்களுடன் திருமணம் நடத்துவதை நாம் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும்.இன்று கும்பலைக் கூட்டி ஏகப்பட்ட அயிட்டங்களைப்போட்டு ஜனங்களை திணறடிக்கும் கூட்டம்தான் அதிகம். இவர்கள் ஜீரணத்திற்கு Gelusil பாயாசம் போடலாம்.ஒரு கால கட்டத்தை ஒட்டி எடுக்கப்படும் இது போன்ற படங்களில்தான் அந்த காலத்து கில்லித்தாண்டு, பேப்பந்து போன்ற இன்று அருகிப்போன விளையாட்டுகளை காண முடிகிறது.

ஒளிப்பதிவு அதிஅற்புதம்.நெடுமுடி வேணு கோக்ஷ்டியினர் நடத்தும் கூத்துக் காட்சிகள் அபாரம்.கொஞ்சம் தமிழுக்கு புதியது என்பதால் ஒரு பாத்திரம் மூலம் விளக்கியிருக்கலாம். இசைக்கூட்டலில் இன்னும் ஈடுபாடு இருந்திருக்கலாம். Period படங்கள் எடுக்கும்போது சிறுசிறு விஷயங்களில் இன்னும் அதிக கவனம் கொள்ள வேண்டும்.`பரதேசி`,`நாடோடித் தென்றல்`படங்களில் இதை முழுமையாகக் காணலாம். ஆனால் இதில் நாதஸ்வர வித்வான் ஒரு இடத்தில் வாட்ச் கட்டிக்கொண்டு வாசிப்பது முரண்.எனக்கு தெரிந்து அந்த காலகட்டத்தில் பாக்கெட் வாட்ச்-தான்.

மோகன்சர்மாவிடம் பணம் இருக்கிறது.அதனால் இது போன்ற படத்தை எடுத்து தன் கலை அரிப்பை நிவர்த்தி செய்து கொண்டுவிட்டார்.இது போன்று சிறுதொகையில் படம் எடுக்கும் கனவு நமக்கும் உண்டு.காலம் கூடட்டும். நம் கனவும் நிறைவேறும்.

No comments:

Post a Comment